ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலில் உள்ள பாகிஸ்தானிய தாலிபன் அமைப்பினரை குறி வைத்து பாகிஸ்தான் கடந்த 10ஆம் தேதி விமானப் படைத் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் உள்ள சாகாய் என்ற இடத்தில் ஆப்கான் படையினர் தாக்குதல் நடத்தினர். இதனால் பொதுமக்கள் உள்பட இரு நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் பலரும் பலியாகினர். மேலும், இரு நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து, இந்த தாக்குதல் தொடர்பாக கத்தார் மற்றும் சவுதி அரேபியா அரசுகள் தலையிட்டு அமைதி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டன. அதன்படி, இரு நாடுகளுக்கு இடையே 48 நேர போர் நிறுத்தம் செய்யப்பட்டது.
ஆனால், போர் நிறுத்த பேச்சுவார்த்தையை மீறி ஆப்கானிஸ்தானின் 3 இடங்களைக் குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. அதனை தொடர்ந்து இரு நாடுகளுக்கு இடையே நிலவும் மோதலை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக கத்தார் மற்றும் துருக்கி மத்தியஸ்தம் செய்தது. அதில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இரு நாடுகளும் உடனடி போர்நிறுத்தத்தை அமல்படுத்துவதற்கு ஒப்புதல் அளித்தன. இந்த முடிவு, எல்லைப் பகுதிகளில் அமைதியை நிலைநாட்டுவதற்கு முக்கிய படியாகக் கருதப்பட்டது.
ஆப்கானிஸ்தானுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நடந்த மோதல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், பாகிஸ்தானுக்கு செல்லும் அனைத்து ஆற்று நீரையும் நிறுத்த ஆப்கானிஸ்தான் திட்டமிட்டுள்ளது. அதாவது, ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் இடையே குனார் ஆறு உள்ளது. 480கி.மீ உள்ள இந்த நதி நீரை சுமார் 70 சதவீதத்தை பாகிஸ்தான் பயன்படுத்தி வருகிறது. இதனை தடுக்க, குனார் ஆற்றின் குறுக்கே விரைவில் அணையை கட்ட ஆப்கானிஸ்தான் திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா சிந்து நதி நீர் நிறுத்தியது போல், எல்லை பிரச்சனையில் பாகிஸ்தானுக்கு எதிராக ஆப்கானிஸ்தான் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து ஆப்கானிஸ்தான் அரசின் நீர்வளத்துறை அமைச்சர் முல்லா அப்துல் லத்தீப் மன்சூர் சமூக ஊடகத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘ஆப்கானியர்கள் தங்கள் சொந்த தண்ணீரை நிர்வகிக்க உரிமை உள்ளது. எனவே குனார் ஆற்றில் அணை கட்டப்படும். ஆப்கான் நதி மேல் நடக்கும் கட்டுமான பணிகள் அனைத்தும் உள்நாட்டு நிறுவனங்களால் மட்டுமே நடத்தப்படும்’ எனத் தெரிவித்துள்ளார். குனார் நதி குறுக்கே அணைக் கட்டினால் பாகிஸ்தானுக்கு பாயும் அனைத்து ஆறுகளும் வரண்டு போய்விடும் என்றும், குனார் நதிநீர் பங்கீடு தொடர்பாக ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் இடையே எந்தவித ஒப்பந்தமும் போடப்படாததால் இந்த நடவடிக்கை பாகிஸ்தானுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/10/25/kunarriver-2025-10-25-12-42-34.jpg)