ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகர் காபூலில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல் நடத்தியது. இத்தகைய சூழலில் தான் இந்த தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் உள்ள சாகாய் என்ற மாவட்டத்தில் ஆப்கான் படையினர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதல் காரணமாக இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லைகள் மூடப்பட்டன. அதே சமயம் பாகிஸ்தானின் 25க்கும் மேற்பட்ட ராணுவ நிலைகளைக் கைப்பற்றியதாக ஆப்கானிஸ்தான் அறிவித்தது.
இதனைத் தொடர்ந்து இந்த விவகாரம் தொடர்பாக கத்தார் மற்றும் சவுதி அரேபியா அரசுகள் தலையிட்டு அமைதி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டன. இந்நிலையில் தான் ஏற்பட்ட ராணுவ மோதலில் 50க்கும் மேற்பட்ட பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் கொன்று குவிக்கப்பட்டதாக ஆப்கானிஸ்தான் தரப்பில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது. அதே சமயம், “தாலிபான்கள் மற்றும் மற்ற படையினரைச் சேர்ந்த 200 பேர்க் கொன்று குவிக்கப்பட்டனர். ஆப்கானிஸ்தானின் 19க்கும் மேற்பட்ட ராணுவ நிலைகள் கைப்பற்றப்பட்டுள்ளன” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் ஆப்கானிஸ்தான் அறிவிப்புக்குப் பாகிஸ்தான் ராணுவம் மறுப்பு தெரிவிக்காததும் கவனிக்கத்தக்கது. மேலும் இதற்குப் பதிலடியாக ஆப்கானிஸ்தான் நடத்திய தாக்குதலில் 23 பாகிஸ்தான் வீரர்கள் பலியானதாகப் பாகிஸ்தான் அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இருப்பினும் 58 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டதாகத் தாலிபான் அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.