ஆப்கானிஸ்தான் நாட்டை 2021இல் தாலிபான்கள் கைப்பற்றிய பிறகு, முதன்முறையாக அவர்களது அரசின் வெளியுறவுத்துறை அமைச்சர் அமீர் கான் முத்தகி இந்தியாவுக்கு ஆறு நாள் அரசு பயணமாக கடந்த 9ஆம் தேதி வருகை தந்தார். ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் பயண விலக்கு அனுமதியுடன் இந்தியா வந்த முத்தகி, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் வர்த்தகம், பொருளாதாரம், அரசியல் உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் விவாதிக்கப்பட்டன.
தாலிபான் வெளியுறவுத்துறை அமைச்சர் இந்தியா வந்த நிலையில், ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் கடந்த 10ஆம் தேதி விமானப் படை தாக்குதல் நடத்தியது. ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள பாகிஸ்தானிய தாலிபன் (Tehreek-e-Taliban) அமைப்பினரை குறி வைத்து தாக்குதல் நடந்ததாகக் கூறப்பட்டது. மேலும், இத்தாக்குதலுக்கு அமெரிக்க ராணுவம் உதவியதாகவும் தகவல் வெளியானது. இந்த தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் உள்ள சாகாய் என்ற மாவட்டத்தில் ஆப்கான் படையினர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதல் காரணமாக இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லைகள் மூடப்பட்டன. அதே சமயம் பாகிஸ்தானின் 25க்கும் மேற்பட்ட ராணுவ நிலைகளைக் கைப்பற்றியதாக ஆப்கானிஸ்தான் அறிவித்தது.
இதனைத் தொடர்ந்து இந்த விவகாரம் தொடர்பாக கத்தார் மற்றும் சவுதி அரேபியா அரசுகள் தலையிட்டு அமைதி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டன. இதனிடையே, ராணுவ மோதலில் 50க்கும் மேற்பட்ட பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் கொன்று குவிக்கப்பட்டதாக ஆப்கானிஸ்தான் தரப்பில் இருந்து தகவல் வெளியானது. ஆப்கானிஸ்தான் அறிவிப்புக்குப் பாகிஸ்தான் ராணுவம் மறுப்பு தெரிவிக்கவில்லை.
இருநாடுகளுக்கும் இடையே பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், இரு நாடுகளிக்கிடையே எல்லை வழியே நடைபெறும் பரஸ்பர வணிகத்துக்கான எல்லை இரண்டாவது நாளாக மூடப்பட்டுள்ளது. இதனால், பதற்றம் அதிகரித்துள்ளது.