மத்திய அரசு சார்பில் அமைக்கப்பட்ட 3 நிபுணர் அடங்கிய குழுக்கள் தமிழ்நாட்டில் கொள்முதல் செய்யப்படவுள்ள நெல்லின் ஈரப்பதம் குறித்து மாவட்டந்தோறும் ஆய்வு செய்ய திட்டமிட்டுள்ளனர் என தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் தெரிவித்திருந்தது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில், “தமிழ்நாட்டில் நடப்பு 2025-2026 ஆம் ஆண்டிற்கான குறுவை பருவ நெல் கொள்முதல் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் தொடங்கி 1.839 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் நெல்லின் ஈரப்பத அளவினை 17% லிருந்து 22% வரை அதிகரிக்க தமிழ்நாடு அரசால் கடந்த 19.10.2025 அன்று ஒன்றிய அரசிடம் அனுமதி கோரப்பட்டிருந்தது. அதனை தொடந்து, ஒன்றிய அரசு தமிழ்நாட்டில் கொள்முதல் செய்யப்படவுள்ள நெல்லின் ஈரப்பதத்தினை ஆய்வு செய்திட மூன்று நிபுணர் அடங்கிய குழுக்களை நியமித்து ஆணையிடப்பட்டுள்ளது. அந்நிபுணர் குழு இன்று (25.10.2025) முதல் தமிழ்நாட்டில் கொள்முதல் செய்யப்படவுள்ள நெல்லின் ஈரப்பதம் குறித்து மாவட்டந்தோறும் ஆய்வு செய்ய திட்டமிட்டுள்ளனர்.
அதன்படி முதல் குழு 25.10.2025 அன்று செங்கல்பட்டு மாவட்டத்திலும், 26.10.2025 அன்று திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களிலும், இரண்டாவது குழு 25.10.2025 அன்று தஞ்சாவூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களிலும், 26.10.2025 அன்று திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களிலும், 27.10.2025 அன்று கடலூர் மாவட்டத்திலும் மற்றும் மூன்றாவது குழு 25.10.2025 அன்று திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களிலும் 26.10.2025 அன்று மதுரை மற்றும் தேனி மாவட்டங்களிலும் ஆய்வு செய்ய உள்ளனர்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் மத்திய குழுவினர் தஞ்சாவூர் மாவட்டங்களில் வன்னாரப்பேட்டை, பொன்னாப்பூர் மற்றும் ராமுத்திரை கோட்டை ஆகிய நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் இன்று (25.10.2025) ஆய்வு செய்து அங்குள்ள நெல்மணிகளைச் சேகரித்து ஆய்வுக்காக டெல்லிக்கு எடுத்துச் செல்வதாகக் கூறப்பட்டது. இதற்காக மத்திய குழுவினர் வருகையை முன்னிட்டு பல்வேறு கட்ட முன்னேற்பாடு பணிகள் செய்யப்பட்டன. இத்தகைய சூழலில் தான் நிர்வாக காரணங்களுக்காகத் தஞ்சாவூரில் மத்திய குழுவினரின் ஆய்வு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும், இந்த ஆய்வு மற்றொரு நாள் நடத்தப்படும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே போன்று புதுக்கோட்டை மாவட்டத்திலும் ஆய்வு நடத்த இருந்த மத்திய குழுவினரின் ஆய்வும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் நாமக்கல் செல்ல இருப்பதால் இன்று திட்டமிட்ட ஆய்வுப் பணிகள் அனைத்தும் நாளைய தினத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/10/25/paddy-lorry-stock-farmer-2025-10-25-11-28-39.jpg)