தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் கவின் கடந்த மாதம் ஜூலை 27 ஆம் தேதி ஆணவக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது. தன் சகோதரியை காதலித்து வந்த பட்டியலின இளைஞரான கவினை கொலை செய்த சம்பவத்தில் பெண்ணின் சகோதரர் சுர்ஜித் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் காவல்துறையில் உதவி ஆய்வாளர்களாகப் பணியாற்றி வரும் சுர்ஜித்தின் தாய் மற்றும் தந்தைக்கும் தொடர்பு இருக்கும், எனவே அவர்களையும் கைது செய்து விசாரிக்க வேண்டும் என கவினின் குடும்பத்தார் போராட்டத்தில் ஈடுபட்டதைத் தொடர்ந்து காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்த சுர்ஜித்தின் தந்தை சரவணன் கைது செய்யப்பட்டார்.
தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். நீதிமன்றத்தின் அனுமதியை பெற்று கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சுர்ஜித் மற்றும் அவரது தந்தை சரவணனனை கஸ்டடியில் எடுத்து சிபிசிஐடி விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, ஆணவப் படுகொலைகளைத் தடுக்க தமிழக அரசு சிறப்பு சட்டத்தை இயற்ற வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடதுசாரி கட்சிகள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றன.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகங்களில் காதல் திருமணங்கள் நடத்திக் கொள்ளலாம் என மார்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், “தமிழகத்தில் சாதி மறுப்பு திருமணங்கள் செய்துகொள்ள தனி ஏற்பாடு இல்லை. எனவே, தமிழ்நாடு முழுவதும் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகங்களில் காதல் திருமணங்கள் நடத்திக் கொள்ளலாம். காதலர்களுக்காக மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகங்கள் திறந்தே இருக்கின்றன. நெல்லையில் ஒரே வருடத்தில் 240 கொலைகள் நிகழ்ந்துள்ளது. இது பதிவு செய்யப்பட்ட கணக்கு. நிலைமை கை மீறி செல்கிறது. கொலைகாரனை கொண்டாடுகிற சூழல் உள்ளது. அதே சமயம் பொதுச் சமூகத்தில் ஆணவக் கொலைக்கு எதிரான நிலை உருவாகி உள்ளது. இந்த சூழலை அரசு பயன்படுத்திக் கொண்டு சாதி ஆணவக் கொலை தடுப்புச் சட்டத்தை கொண்டு வர வேண்டும். வருகிற சட்டமன்ற கூட்டத் தொடரிலேயே சாதி ஆணவக் கொலை தடுப்புச் சட்டத்தை முதலமைச்சர் கொண்டு வர வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.