Advertisment

“விஜய்யின் பேச்சு பொறுப்பற்ற அரசியல் உள்நோக்கம் கொண்டது” - பெ.சண்முகம் எச்சரிக்கை

vijayshanmugam

P. Shanmugam says Vijay's speech has irresponsible political motives

கரூரில் கடந்த 27ஆம் தேதி நடைபெற்ற தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் பிரச்சாரத்தின் போது, கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் இந்தியாவையே உலுக்கியுள்ளது. இந்த துயர சம்பவம் தொடர்பாக மேற்கு மாவட்டச் செயலாளர் மதியழகன், கட்சியின் பொதுச் செயலாளர் என்.ஆனந்த், நிர்மல் குமார் உள்ளிட்டோர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும், கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் மதியழகன், பிரச்சாரத்திற்கு கொடி கம்பம், பிளக்ஸ் பேனர்கள் ஏற்பாடு செய்த கரூர் நகர பொறுப்பாளர் பவுன்ராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டு 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

Advertisment

இந்த பரபரப்பான சூழ்நிலையில், சம்பவம் நடந்து மூன்று நாட்களுக்கு பிறகு கரூர் சம்பவம் தொடர்பாக விளக்கம் அளித்து த.வெ.க தலைவர் விஜய் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் அவர், ‘கிட்டத்தட்ட ஐந்து மாவட்டத்திற்கு பிரச்சாரத்திற்கு போனோம். இந்த மாதிரி எதுவுமே நடக்கவில்லை. கரூரில் மட்டும் ஏன் இப்படி நடக்கிறது? எப்படி நடக்கிறது? மக்களுக்கு எல்லாம் உண்மையும் தெரியும். மக்கள் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.  கரூரை சேர்ந்த  மக்கள் சொல்லும் பொழுது கடவுளே நேரில் வந்து இறங்கி வந்து உண்மைகளை சொல்ற மாதிரி தோணுது. சீக்கிரமே எல்லாம் உண்மைகளும் வெளியே வரும். ஸ்பாட்டில் பேசியதை தவிர நாங்கள் வேறு எதுவும் செய்யவில்லை. நாங்களும் மனுஷன் தானே. எங்கள் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் தோழர்கள் மேல் எஃப்ஐஆர், சோசியல் மீடியாவை சேர்ந்த நண்பர்கள், தோழர்கள் அவர்கள் மீது எல்லாம் எஃப்ஐஆர் போட்டு பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். சி.எம் சார், உங்களுக்கு ஏதாவது பழி வாங்கும் என்ற எண்ணம் இருந்தது என்றால் என்னை என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள். என் தோழர்கள் மீது கை வைக்காதீர்கள். நண்பர்களே தோழர்களே நம்முடைய அரசியல் பயணம் இன்னும் வலிமையாக. இன்னும் தைரியத்தோடு கண்டினியூ ஆகும்” எனப் பேசினார்.

Advertisment

இந்த நிலையில், விஜய்யின் காணொளி உரை பொறுப்பற்ற அரசியல் உள்நோக்கம் கொண்டது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது, ‘தமிழக வெற்றிக் கழகம் 27ம் தேதி கரூரில் நடத்திய பரப்புரைக் கூட்டத்தில் நெரிசலில் சிக்கி இதுவரை 41 அப்பாவி மக்களின் உயிர்கள் பறிபோயுள்ளன. பலர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். விரும்பத்தகாத நிகழ்வு நடைபெற்ற நொடியில் இருந்தே தன்னார்வத்துடன் பொதுமக்களும், மருத்துவத்துறை, காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகமும் இணைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டு மக்களின் மதிப்புமிக்க உயிர்களைப் பாதுகாத்துள்ளது. தமிழ்நாட்டு முதலமைச்சர் உள்பட அமைச்சர்களும், அதிகாரிகளும் 27ந் தேதி இரவு முதலே நேரில் கரூர் சென்று இப்பணிகளை விரைவுபடுத்தி வருகிறார்கள். உயிரிழந்தவர்களுக்கும், காயமடைந்தவர்களுக்கும் நிவாரணத் தொகையும் அரசு சார்பில் வழங்கப்பட்டுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் உட்பட தமிழ்நாட்டின் அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களும் நேரில் கரூர் சென்று தங்களது ஒருமைப்பாட்டையும், ஆறுதலையும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தெரிவித்து வருகிறார்கள்.

ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டு விசாரணை துவங்கியுள்ளது. காவல்துறை மட்டத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது. தமிழக வெற்றிக் கழகம் உட்பட பல்வேறு தரப்பினர் நீதிமன்றத்தையும் நாடியுள்ளனர். இதன் மூலம் மேலும் விபரங்கள் தெரிய வர வாய்ப்புள்ளது. இந்நிலையில் இந்த கொடும் சம்பவம் நடைபெற்று மூன்று தினங்களுக்குப் பிறகு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார். தனது கட்சி நடத்திய நிகழ்வில் ஏற்பட்டுள்ள உயிர் இழப்புகளுக்கும், காயமடைந்தவர்களுக்கும் மாநில அரசும், அரசியல் கட்சிகளும், மக்களும் செய்திட்ட உதவிகளுக்கு நன்றி தெரிவிப்பதே சரியானதாக இருக்க முடியும். தான் மிக மிக தாமதமாக வந்தது குறித்தோ, பரப்புரையின் போது நெரிசலில் மக்கள் சிக்கிக் கொண்டிருந்த நேரத்தில் தனது தொண்டர்களை கட்டுப்படுத்த முயற்சிக்காதது, அவர் உடனடியாக கரூரை விட்டு வெளியேறியதற்கான உரிய காரணங்களைப் பற்றியோ காணொளியில் ஒரு வார்த்தை கூட தெரிவிக்கவில்லை. இதற்கு மாறாக அவரது உரை என்பது முழுமையான அரசியல் உள்நோக்கம் கொண்டதாக இருக்கிறது.

உயிர் இழப்புகளுக்கு வருத்தம் தெரிவிப்பதற்கு மாறாக, அரசு நிர்வாகத்தின் மீது பழி சுமத்துவதாகவே இருக்கிறது. 41 பேர் உயிர் இழப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கை கூட தன்னையும், தன் கட்சி தொண்டர்களையும் பழிவாங்குவதற்கான மாநில அரசின் சதி என்கிறார். தனது கட்சி தொண்டர்களை தூண்டி விடும் விதமாகவே அவரது உரை அமைந்துள்ளது. இது போன்ற அரசியல் உள்நோக்கம் கொண்ட பொறுப்பற்ற கருத்தை தமிழ்நாடு மக்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள். மதிப்புமிக்க மனித உயிர்கள் பறிபோயுள்ள நிலையில் தலைமைப் பண்பையும், மனித மாண்பையும் வெளிப்படுத்த வேண்டிய தருணத்தில் விஜய் வெளியிட்டுள்ள காணொளி எவ்வகையிலும் ஏற்புடையதல்ல. இத்தகைய உள்நோக்கங்கள் விஜய்யின் அரசியல் பயணம் குறித்து தமிழக மக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்’ எனத் தெரிவித்துள்ளார். 

karur stampede stampede p shanmugam tvk vijay tvk
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe