Advertisment

“ஜி.ஆர்.சுவாமிநாதன் நீதிபதியாக நீடிப்பதற்குத் தகுதியற்றவர்” - பெ.சண்முகம் கண்டனம்

psh

P. Shanmugam condemns G.R. Swaminathan is unfit to continue as a judge

மதுரை எழுமலையைச் சேர்ந்த ராம ரவிக்குமார் என்பவர், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், ‘இந்தாண்டு கார்த்திகைத் திருவிழாவை முன்னிட்டு திருப்பரங்குன்றம் மலையின் உச்சியின் உள்ள தீபத் தூணில் அல்லாமல் பிள்ளையார் கோவில் தீப மண்டபத்தில் கார்த்திகை தீபத்தை ஏற்ற முடிவு செய்துள்ளனர். இது ஏற்றத்தக்கது அல்ல. திருப்பரங்குன்றம் மலையில் காலம் காலமாக மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் தான் தீபம் ஏற்றப்படுகிறது. எனவே அதற்கான அறிவிப்பை நீதிமன்றம் உறுதி செய்து ஒரு உத்தரவாக வெளியிட வேண்டும்’ என்று குறிப்பிட்டிருந்தார்.

Advertisment

இந்த மனுவை ஏற்கெனவே விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், மலைக்கு நேரடியாகச் சென்று ஆய்வு மேற்கொண்டிருந்தார். அதன் அடிப்படையில், இந்த வழக்கில் பல்வேறு தரப்பினரும் ஒரு மனுதாரராக இணைத்து வழக்கை இன்று தீர்ப்புக்காக ஒத்திவைத்திருந்தார். இந்த வழக்கு கடந்த 1ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, இந்து சமய அறநிலையத்துறை, வக்ஃப் வாரியம், அரசு தரப்பு என பல்வேறு தரப்பின் கருத்துக்களும் கேட்கப்பட்டது. இந்த வழக்கை முழுமையாக விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், “கார்த்திகை திருநாளின் போது திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் கார்த்திகை தீபத்தை ஏற்ற வேண்டும். அதற்கான முழுமையான பாதுகாப்பை மதுரை மாநகர காவல்துறை வழங்க வேண்டும்” என்று உத்தரவிட்டார்.

Advertisment

இந்த உத்தரவை எதிர்த்து நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த மேல்முறையீடு மனு இன்று (03-12-25) மதியம் விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘சி.ஐ.எஸ்.எஃப் வீரர்களை அழைத்துச் சென்று தீபத்தூணில் மனுதாரர் தீபம் ஏற்றலாம் என்று நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டார்.அதன்படி, கார்த்திகை தீபத் திருநாளான இன்று (03-12-25) மாலை 6 மணிக்கு திருப்பரங்குன்றம் மலையின் உச்சியின் மீதுள்ள தீபத்தூணில் ஏற்றாமல் பிள்ளையார் கோயிலில் கோயில் நிர்வாகம் கார்த்திகை தீபத்தை ஏற்றினர். அப்போது அங்கு கூடியிருந்த இந்து அமைப்பினர், நீதிமன்ற உத்தரவுப்படி தூணில் தீபம் ஏற்றவில்லை என்று காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அதனை தொடர்ந்து, அங்கு அமைக்கப்பட்டிருந்த பேரிகார்டுகளை உடைத்து மலை மீறி ஏற முயற்சி செய்ததால் அங்கு இந்து முன்னணி அமைப்பினருக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்த தள்ளுமுள்ளில் போலீசார் உள்பட பலருக்கு காயம் ஏற்பட்டது. தடுப்புகளை தூக்கி எறிந்த இந்து அமைப்பினர் ஏராளாமானோர் கூடி மலை மீது ஏற முயற்சி செய்து அங்கு போராட்டம் நடத்தி வந்ததால் பெரும் பதற்றமான சூழல் நிலவுகிறது. இதனையடுத்து போராட்டம் நடத்திய இந்து அமைப்பினரை குண்டுக்கட்டாக தூக்கி போலீசார் கைது செய்தனர். இதனால், திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சி.ஐ.எஸ்.எஃப் வீரர்களை அழைத்துச் சென்று தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் அவர் பேசியதாவது, “திருப்பரங்குன்றத்தில் இன்றைய தினம் மாநில அரசினுடைய உறுதியான நடவடிக்கையால், வழக்கமாக ஏற்றப்படுகின்ற இடத்தில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டிருக்கிறது. இத்தகைய உறுதியான நடவடிக்கையை எடுத்த மாநில அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பாராட்டுக்களைத் தெரிவிக்கிறேன். மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் குறிப்பட்ட இடத்தில் புதிதாக தீபம் ஏற்றப்பட வேண்டும் என்ற உத்தரவும், அதற்கு பாதுகாப்பாக உயர்நீதிமன்றத்தில் இருக்கக்கூடிய மத்திய பாதுகாப்பு படையை பயன்படுத்துங்கள் என்ற உத்தரவும் வன்மையாக கண்டித்தக்கது.

மத்திய பாதுகாப்பு படையினர், நீதிமன்ற பாதுகாப்புக்காக வந்திருக்கிறார்களே தவிர வேறு பணிகளில் ஈடுபடச் சொல்வது என்பது அத்துமீறிய செயல். நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், மாநில அரசுடன் மோதல் போக்கை கடைபிடிக்கக்கூடிய வகையில் தான், இத்தகைய உத்தரவை விட்டிருக்கிறார். கார்த்திகை தீபம் ஏற்றப்பட வேண்டியது தான் எல்லா மக்களுடைய விருப்பமே தவிர, இந்த இடத்தில் தான் ஏற்ற வேண்டும் என்று பிடிவாதம் பிடிப்பது யாராலும் ஏற்றத்தக்க முடியாத விஷயம். நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் நீதிபதியாக நீடிப்பதற்கே தகுதியற்றவர். மாநில அரசுக்கும், மத்திய படைக்கும் மோதலை உருவாக்கும் வகையில் இத்தகைய உத்தரவை வெளியிட்டிருக்கிற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் மீது தலைமை நீதிபதி உறுதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவுக்கு உடனடியாக தடை விதிக்க வேண்டும். திருப்பரங்குன்றம் அமைதியாக இருப்பதற்கும், மக்களுடைய இயல்பு வாழ்க்கை பாதிக்காமல் இருப்பதற்கும் தலைமை நீதிபதி இதில் உடனடியாக தலையிட வேண்டும். நீதிபதியினுடைய இத்தகைய அத்துமீறலுக்கு எதிராக தமிழ்நாடு அரசாங்கம் உறுதியான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும். தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி துணை நிற்கும், தமிழக மக்கள் துணை நிற்பார்கள். நீதிபதியினுடைய அடாவடித்தனமான அத்துமீறலை அனுமதிக்க முடியாது” என்று கூறினார். 

Justice G.R. Swaminathan p shanmugam Thiruparankundram
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe