ஓய்வூதியம் தொடர்பான புதிய அறிவிப்பை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (03.01.2026) வெளியிட்டார். அதில், “தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் மாநில அரசு அலுவலர்கள் பெற்ற கடைசி மாத ஊதியத்தில் 50 சதவீதம் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியமாக வழங்கப்படும். இவ்வாறு 50 சதவீதத்திற்கு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்குவதற்கு, பணியாளர்களின் 10 சதவீத பங்களிப்போடு, ஓய்வூதிய நிதியத்திற்குத் தேவைப்படும் கூடுதல் நிதி முழுவதையும் தமிழ்நாடு அரசே ஏற்கும்.

Advertisment

 50 சதவீதம் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்களுக்கு ஆண்டுதோறும் ஆறு மாதத்திற்கு ஒருமுறை அரசு அலுவலர்களுக்கு வழங்கப்படுவதற்கு இணையான அகவிலைப்படி உயர்வு அளிக்கப்படும். ஓய்வூதியதாரர் இறந்துவிட்டால் அவர் ஏற்கெனவே பரிந்துரைத்த குடும்ப உறுப்பினர்களுக்கு அவர் பெற்று வந்த ஓய்வூதியத்தில் 60 சதவீதம் குடும்ப ஓய்வூதியமாக வழங்கப்படும். அரசு அலுவலர்கள் ஓய்வு பெறும் போதும், பணிக்காலத்தில் இறக்க நேரிடும் போதும், அவரவரின் பணிக்காலத்திற்கேற்ப 25 இலட்சம் ரூபாய்க்கு மிகாமல் பணிக்கொடை வழங்கப்படும்.

Advertisment

புதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்பட்டபின், ஓய்வூதியம் பெறுவதற்கான தகுதிப் பணிக்காலத்தை நிறைவு செய்யாமல் பணி ஓய்வு பெறும் அனைத்து அலுவலர்களுக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்கப்படும். பங்களிப்புடன் கூடிய ஓய்வூதியத் திட்டத்தின் (Contributory Pension Scheme) கீழ் பணியில் சேர்ந்து, புதிய தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் செயல்படுத்தப்படுவதற்கு முன்னர் இடைப்பட்ட காலத்தில் ஓய்வூதியம் இன்றி பணி ஓய்வு பெற்றவர்களுக்கு சிறப்பு கருணை ஓய்வூதியம் வழங்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில் இது தொடர்பாக முன்னாள் மத்திய நிதி அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ப. சிதம்பரம் எம்.பி., எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அவர்கள் பெரிதும் விரும்பிய கடைசி மாத ஊதியத்தில் 50% உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம்,  ஒய்வூதிய நிதியத்திற்குத் தேவையான பயனாளிகளின் 10% பங்களிப்பு  - ஆகிய இரண்டு முக்கிய கருத்துக்களைக் கொண்டு தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட புதிய ஓய்வூதியத் திட்டம் (TAPS) வரையப்பட்டுள்ளது. அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் அரசின் நோக்கத்தை நான் வரவேற்றுப் பாராட்டுகிறேன். 

Advertisment

அதே நேரத்தில் ஓய்வூதிய நிதியத்திற்குப் பயனாளிகளின் பங்களிப்பு அவசியம் என்பதை ஏற்றுக் கொண்ட அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களைப் பாராட்டுகிறேன். மத்திய அரசின் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை (UPS) விட தமிழ்நாடு அரசின் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் (TAPS) சில அம்சங்களில் கூடுதலான சலுகைகளை அளிக்கிறது என்பது மகிழ்ச்சியளிக்கிறது. எந்தப் பிரச்னையையும் திறந்த மனதோடும் நல்லுணர்வோடும் அணுகினால் ஓர் இணக்கமான தீர்வைக் காண முடியும் என்பதற்குத்  தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் (TAPS) ஒரு சிறந்த சான்று” எனக் குறிப்பிட்டுள்ளார்.