தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. இதனிடையே, திமுகவுடன் கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ், அந்த கூட்டணியில் இருந்து விலகி தவெகவுடன் கூட்டணி அமைக்கவுள்ளதாக சில தினங்களுக்கு முன்பு தகவல் வெளியாகியிருந்தது. மேலும், தவெக தலைவர் விஜய் - காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி இடையே கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை நடந்ததாகச் செய்தி வெளியானது. இந்த தகவலுக்கு, தவெக துணை பொதுச் செயலாளர் சி.டி.ஆர் நிர்மல் குமார் மற்றும் தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை ஆகியோர் மறுப்பு தெரிவித்திருந்தனர்.
இத்தகைய பரபரப்பான சூழ்நிலையில், செல்வப்பெருந்தகை திடீரென டெல்லி சென்றார். இதனையடுத்து, திமுக - காங்கிரஸ் உடனான கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. இதனையடுத்து தமிழ்நாட்டில் திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த 5 பேர் கொண்ட குழுவை காங்கிரஸ் கட்சி அமைத்துள்ளதாகத் தகவல் வெளியானது. அந்த குழுவில், கிரிஷ் ஜோடங்கர், செல்வப்பெருந்தகை, சுரே ஜெக்டே, நிவேதி ஹால்வா, ராஜேஷ் குமார் ஆகியோர் இருப்பதாகக் கூறப்பட்டது.
இந்நிலையில் இது தொடர்பாக முன்னாள் மத்திய நிதி அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ப. சிதம்பரம் எம்.பி. எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தலைக் கருதி திமுக உடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு காங்கிரஸ் தலைமை 'ஐந்து உறுப்பினர் குழு' வை நியமித்திருப்பதை வரவேற்கிறேன். இந்தியா கூட்டணியின் ஒற்றுமையை இந்த அறிவிப்பு வலியுறுத்துகிறது. அரசல் புரசலாக அவ்வப்போது வெளியிடப்படும் செய்திகளுக்கு இந்த அறிவிப்பு முடிவு கட்டும் என்று நம்புகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/11/22/p-chidamram-mic-2025-11-22-11-48-06.jpg)