மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்ற 56-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் (செப்டம்பர் 3-4) புது தில்லியில் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் மாநில மற்றும் யூனியன் பிரதேச நிதியமைச்சர்கள், மத்திய நிதி இணையமைச்சர், சகத்தின் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் அடுத்த தலைமுறை ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் குறித்து விவாதிக்கப்பட்டு, முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

Advertisment

அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''கூட்டத்தில் இரண்டு அடுக்குகளாக ஜிஎஸ்டி வரி வரம்பைக் குறைக்க ஒப்புதல் கொடுக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 22ஆம் தேதி முதல் புதிய வரிகள் அமலாகும். சாமானிய மக்களுக்கான பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. டிவி, ஏசி உள்ளிட்ட பொருட்களுக்கு 28 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக வரி குறைக்கப்பட்டுள்ளது. கார்களுக்கான வரி 28 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. பெரிய கார்களுக்கு 40% ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது.

டிராக்டர் உள்ளிட்ட விவசாய உபகரணங்கள் மீதான ஜிஎஸ்டி வரி ஐந்து சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. சிகரெட், பான் மசாலா, குளிர்பானங்களுக்கு 40% ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளது. அனைத்து மோட்டார் வாகன பாகங்களுக்கும் இனி 18 சதவீதம் வரி வசூலிக்கப்படும். சோப். ஷாம்பு, டூத் பேஸ்ட் போன்ற பொருட்களுக்கு ஐந்து சதவீதம் மட்டுமே வரி வசூலிக்கப்படும். பால், ரொட்டி, சப்பாத்தி போன்ற பொருட்களுக்கு வரி இல்லை. நொறுக்கு தீனிகள், வெண்ணெய் போன்ற பொருட்கள் மீதான வரி பதினாறு சதவீதத்தில் இருந்த நிலையில் 12 சதவீதம் மட்டுமே வரி வசூலிக்கப்படும். தனிநபர் மருத்துவக் காப்பீட்டுக்கு ஜிஎஸ்டி கிடையாது'' என்றார். 

இந்த நிலையில் முன்னாள் நிதியமைச்சரும், காங்கிஸ் மூத்த தலைவருமான பா.சிதம்பரம், “ஜி.எஸ்.டி. விகிதங்கள் மற்றும் பல்வேறு பொருட்கள் மற்றும் சேவைக்கான வரி விகிதங்களை குறைப்பது வரவேற்கத்தக்கது. ஆனால், இது 8 ஆண்டுகள் தாமதமாகிவிட்டது. தற்போதைய GST வடிவமைப்பும், இன்று வரை நிலவிய விகிதங்களும் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கக் கூடாது. கடந்த 8 ஆண்டுகளாக  ஜி.எஸ்.டி.யின் வடிவமைப்பு மற்றும் விகிதங்களுக்கு எதிராக நாங்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தோம், ஆனால் எங்கள் கோரிக்கைகள் செவிடன் காதில் ஊதிய சங்கு போல் இருந்துவிட்டது. தற்போது இந்த மாற்றங்களை செய்ய அரசாங்கத்தை தூண்டியது எது என்பது பற்றி ஊகிப்பது சுவாரஸ்யமாக இருக்கும்.

Advertisment

மந்தமான வளர்ச்சியா? பெருகிவரும் வீட்டுத் தேவைகளுக்கான கடனா?  குறைந்து வரும் வீட்டு சேமிப்பா பீகாரில் தேர்தலா? டிரம்ப் மற்றும் அவரது வரி விதிப்பா? அல்லது இவை அனைத்துமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.