மணிப்பூரில் கடந்த 2023 ஆம் ஆண்டு குக்கி மற்றும் மெய்தி ஆகிய சமூக மக்களிடையே ஏற்பட்ட மோதல் மாநிலம் முழுவதும் வன்முறையாக மாறியது. இந்த மோதல் போக்கிற்கு நாட்டின் பல்வேறு மாநிலத்தில் இருந்தும் எதிர்ப்புக் குரல்கள் எழுந்தன. பொதுமக்கள், பெண்கள், சிறார்கள் என பலர் இந்த வன்முறையில் கொல்லப்பட்டனர். இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக மணிப்பூர் வன்முறை தொடர்ந்து நீடித்து வந்த நிலையில், கலவரத்தை தடுக்க தவறியதாகக் கூறி மணிப்பூர் மாநில முதல்வர் பிரேன் சிங் மன்னிப்பு கேட்டார். அதன் பின்னர், கடந்த பிப்ரவரி மாதம் அவர் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். அதனை தொடர்ந்து, அம்மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.
இந்நிலையில் பிரதமர் மோடி முதன் முறையாக இன்று (13.09.2025) மணிப்பூருக்கு பயனம் மேற்கொண்டுள்ளார். இந்த பயணத்தின் ஒரு பகுதியாக வன்முறையால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்த மணிப்பூர் மக்களை சந்தித்து பிரதமர் மோடி கலந்துரையாடினார். அதனைத் தொடர்ந்து சுராசந்த்பூர் என்ற இடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.7 ஆயிரம் கோடி மதிப்புள்ள திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார். அதனைத் தொடர்ந்து அவர் பேசுகையில், “நாட்டின் பல்வேறு பகுதிகளில் மணிப்பூரின் குழந்தைகள் பலர் (பாதுகாப்புப்படை வீரர்கள்) இந்தியத் தாயைப் பாதுகாப்பதில் ஈடுபட்டுள்ளனர். சமீபத்தில், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் இந்திய ராணுவத்தின் சக்தியை (பலம்) உலகம் கண்டது.
நமது வீரர்கள் மிகப்பெரிய அழிவை ஏற்படுத்தியதால் பாகிஸ்தான் ராணுவம் பீதியடையத் தொடங்கியது. இந்தியாவின் இந்த வெற்றியில் மணிப்பூரின் பல துணிச்சலான மகன்கள் மற்றும் மகள்களின் வீரமும் அடங்கும். அதேபோல், நமது துணிச்சலான தியாகி தீபக் சிங்ககாமின் துணிச்சலுக்கு நான் தலை வணங்குகிறேன். ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது அவர் செய்த தியாகத்தை நாடு எப்போதும் நினைவில் வைத்திருக்கும். மணிப்பூரி கலாச்சாரம் இல்லாமல் இந்திய கலாச்சாரம் முழுமையடையாது என்று நான் கூறியிருந்தேன். மணிப்பூரின் விளையாட்டு வீரர்கள் இல்லாமல், இந்தியாவின் விளையாட்டுகளும் முழுமையடையாது. மணிப்பூரின் இளைஞர்கள் மூவர்ணக் கொடியின் பெருமைக்காக தனது முழு மனதையும் ஆன்மாவையும் அர்ப்பணிக்கும் இளைஞர்கள்” என்று நீண்ட உரையை நிகழ்த்தியிருந்தார்.
இந்த நிலையில் பிரதமரின் மணிப்பூர் பயனத்தை காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதமபரம் விமரித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “2023ஆம் ஆண்டில் மணிப்பூரில் நடந்த கலவரத்தில்
* 258 பேர் உயிரிழந்தனர்
* 1,108 பேர் காயமடைந்தனர்
* 532 மத வழிபாடு இடங்கள் சேதமடைந்தன
* 60,000 பேர் இடம் பெயர்ந்தனர்
* பல்லாயிரம் பேர் அகதிகள் முகாம்களில் இன்றும் இருக்கின்றனர்
இரண்டு ஆண்டுகளாகப் பிரதமர் மோடிமணிப்பூரைத் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை நேற்று மணிப்பூர் சென்ற மோடி ஒரு வார்த்தை வருத்தம் தெரிவிக்கவில்லை, இரண்டு ஆண்டுகளாக வராததற்கு மன்னிப்புக் கேட்கவில்லை. ரூ 7,300 கோடி திட்டங்கள், ரூ 1,200 கோடி திட்டங்கள் என்று மணிப்பூர் மக்களை விலைக்கு வாங்க முடியுமா?” என்று சாடியுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/09/14/1-2025-09-14-12-22-33.jpg)