மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் கடந்த 2005ஆம் ஆண்டு முதல், நாட்டில் நடைமுறையில் இருந்து வருகிறது. ஆண்டுக்கு 100 நாட்கள் நடக்கும் இத்திட்டத்தை 100 நாள் வேலை திட்டம் என்றும் மக்கள் அழைத்து வருகின்றனர். கிராமப்புற மக்களுக்கு வாழ்வாதாரம் அளிக்கும் வகையில் கொண்டு வரப்பட்ட இத்திட்டத்தால் கோடிக்கணக்கான மக்கள் பயன் பெறுகின்றனர். 

Advertisment

இந்த திட்டத்தின் பெயரை பா.ஜ.க தலைமையிலான மத்திய அரசு ‘விக்ஸித் பாரத் ஜி ராம் ஜி’ என்ற பெயரில் புதிய திட்டமாக கொண்டு வர திட்டமிட்டது. மேலும் இதுவரை வழங்கி வந்த 90 சதவித நிதியை 60 சதவிதமாக குறைத்து திருத்தம் செய்தது. அதோடு 40 சதவித நிதியை மாநிலங்கள் ஏற்க வேண்டும் எனவும் 100 நாட்கள் இருந்த வேலையை 125 நாட்களாகவும் உயர்த்தியது. இத்திட்டத்திற்கு மகாத்மா காந்தி பெயரை மாற்றி இந்தி மொழியில் பெயர் வைக்கப்படுவதாக திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. ஆனால் கடந்த 16ஆம் தேதி நாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடரில் புதிய திட்ட மசோதாவை மத்திய அரசு நிறைவேற்றியது. 

Advertisment

இதற்கு கண்டனங்கள் எழுந்து வந்த நிலையில் மூத்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நேற்று எதிர்ப்பு தெரிவித்து வீடியோ வெளியிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து முன்னாள் நிதியமைச்சர் பா.சிதம்பரம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர், “காந்தி 1948 ஜனவரி 30ஆம் தேதி கொல்லப்பட்டார். ஏறத்தாழ 77 ஆண்டுகளுக்குப் பிறகு அவரின் பெயரை நீக்கியதன் மூலம் இரண்டாவது முறையாக கொலை செய்துள்ளனர். காந்தியின் பெயரை நீக்கியது மட்டும் இல்லாமல் வாயிலேயே நுழையாத பெயரை வைத்திருக்கின்றனர். இந்தி வார்த்தைகளை ஆங்கில எழுத்தில் எழுதினால் அது இந்தியா? ஆங்கிலமா? 

தமிழ் சொற்களை வங்காள மொழியில் எழுதினால் தமிழர்களுக்கும் புரியாது வங்காளதவர்களுக்கும் புரியாது. அதேபோல் இந்தப் பெயரை ஆங்கிலம் தெரிந்தவர்களுக்கும் புரியாது இந்தி தெரிந்தவர்களுக்கும் புரியாது. நாங்கள் கொண்டு வந்த திட்டத்தின் படி எல்லோரும் இதில் வேலை செய்யலாம். அவர்களுக்கு மத்திய அரசு ஊதியம் வழங்கும். இதில் மாநில அரசுடைய பங்களிப்பு 25 சதவீதம் தான். இந்தத் திட்ட மூலம் தமிழ்நாட்டில் 95% பெண்கள் பயன் பெற்றனர். இந்தத் திட்டத்தை 2004 ஆம் ஆண்டு நான் அறிவித்த போது அதற்கு முன்பாக நீண்ட நெடிய ஆலோசனைகள் இருந்தது. நாடாளுமன்றத்தில் இரு அவைகளிலும் ஏக மனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. பாஜக அரசால் அப்போது எதிர்க்க முடியவில்லை. ஏனென்றால் எதிர்ப்பதற்கு ஒரு பாய்ண்டும் இல்லை. 

Advertisment

இந்தத் திட்டம் அமல்படுத்தப்பட்டு 20 ஆண்டுகள் ஆகிவிட்டது. இதில் ஏதாவது குறை இருந்தால் அதைத் தீர்ப்பதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஆனால் அவர்கள் திட்டத்தையே ரத்து செய்கின்றனர். அதைத்தான் கடுமையாக எதிர்க்கிறோம். இந்தத் திட்டம் நாடு முழுவதும் அமலாக்கப்பட போவதில்லை. மத்திய அரசு எந்த மாவட்டத்தில் கொண்டு வர நினைக்கிறதோ அந்த மாவட்டத்தில் மட்டும்தான் அமல் ஆகும். நாங்கள் நாடு முழுவதும் கொண்டு வந்தோம். யாருக்காவது வேலை வேண்டுமென்றால் அதன் மூலம் வேலை கொடுத்தோம். ஆனால் இதில் அப்படி இல்லை. அதுபோக இந்த திட்டத்திற்கு மத்திய அரசு ஒரு குறிப்பிட்ட தொகை ஒதுக்கும். அதற்கு மேல் செலவானால் அதை மாநில அரசு கொடுக்க வேண்டும். நான்காண்டுகளுக்கு முன்பு ஒரு லட்சத்து 11 ஆயிரம் கோடி ஒதுக்கினார்கள். ஆனால் கடந்த மூன்று ஆண்டுகளாக 86 ஆயிரம் கோடி தான் ஒதுக்குகிறார்கள். அடுத்த வருடம் 65 ஆயிரம் கோடி தான் ஒதுக்குவோம் என்கிறார்கள். அவர்கள் ஒதுக்கும் நிதியை விட குறைவான நிதியை மாநில அரசு ஒதுக்கினால் அங்கு இந்த திட்டம் அமல் ஆகாது. மாநில அரசின் பொருளாதாரத்தைப் பொறுத்து தான் இத்திட்டத்தில் மாநில அரசின் கடமை இருக்கிறது. முன்னதாக மத்திய அரசுக்கு இந்த கடமை இருந்தது. ஆனால் இப்போது மாநில அரசுக்கு தள்ளி விட்டார்கள்

இதுபோக வருடத்தில் அறுவடை நாட்களில் இந்தத் திட்டம் கிடையாது. அதே போல் மத்திய அரசு ஒரு மாவட்டத்தை குறிப்பிட்டு அதில் வேலை கிடையாது என சொல்லிவிட்டால் அங்கு இருப்பவர்கள் வேலை கேட்க முடியாது. இது போல் பல விபரீத குறைபாடுகள் இத்திட்டத்தில் இருக்கிறது. இந்த மோசமான திட்டங்களுக்கு காந்தியின் பெயரை வைப்பதை நாங்கள் விரும்பவில்லை” என்றார்.