உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட் போன்ற மாநிலங்களில் ஒவ்வொரு ஆண்டின் ஜூலையில் இருந்து ஆகஸ்ட் வரையிலான கன்வார் யாத்திரையை இந்துக்கள் மேற்கொண்டு வருகிறார்கள். உத்தரகாண்ட் மாநிலத்தின் ஹரித்வார் உள்ளிட்ட புனித தலங்களுக்குச் சென்று கங்கை நீரை எடுத்து வந்து தங்கள் ஊர்களில் உள்ள சிவன் கோவில்களில் அபிஷேகம் நடத்துவார்கள். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

கடந்த ஆண்டின் போது, கன்வார் யாத்திரைப் பாதையில் உள்ள அனைத்து உணவகங்களிலும் அவற்றின் உரிமையாளர்களின் பெயர்களை காட்சிப் பலகைகளில் இடம்பெறச் செய்ய வேண்டும் என்று முசாபர்நகர் காவல்துறை உத்தரவிட்டது. அதனை தொடர்ந்து, அந்த உத்தரவை யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க அரசு உத்தரப் பிரதேச மாநில முழுவதும் நீட்டித்தது. இதையடுத்து, உத்தரகாண்ட் மற்றும் மத்தியப் பிரதேச அரசுகளும், அந்த உத்தரவை பின்பற்றியது. இந்த வழிகாட்டு முறையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த உச்ச நீதிமன்றம், கடை உரிமையாளர்கள் தங்கள் உணவகங்களில் வழங்கப்படும் உணவு வகையை மட்டுமே காட்சிப்படுத்த வேண்டும் என்று கூறி உ.பி அரசின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது.

இந்த நிலையில், இந்தாண்டின் கன்வார் யாத்திரை வரும் ஜூலை 11ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்த யாத்திரையை ஒட்டி, கடந்தாண்டைப் போல இந்தாண்டும் கன்வார் யாத்திரை செல்லும் வழித்தடத்தில் உள்ள அனைத்து உணவகங்களிலும் உரிமையாளர்களின் பெயர்களை காட்சிப்படுத்தும் வகையில் பலகைகள் வைக்க வேண்டும் என்று உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மீறு யோகி ஆதித்யநாத் நடந்து கொள்வதாக காங்கிரஸ், சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்த நடவடிக்கைக்கு, எதிர்க்கட்சிகளிடம் இருந்து மட்டுமல்லாமல், தேசிய ஜனநாயகக் கூட்டணி இடம்பெற்றுள்ள ஐக்கிய ஜனதா தளம் மற்றும் ராஷ்டிரிய லோக் தளம் ஆகிய கட்சிகள் கூட எதிர்ப்பு தெரிவித்தன.

இந்நிலையில், அகில இந்திய மஜ்லிஸ்-இ-இடிஹதுல் முஸ்லிமின் கட்சியின் தலைவரும் ஹைதராபாத் நாடாளுமன்ற உறுப்பினருமான அசாதுதீன் ஓவைசி, யோகி ஆதித்யநாத் தலைமையிலான உ.பி அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், “முசாபர்நகர் பைபாஸில் பல ஹோட்டல்கள் உள்ளன. அந்த ஹோட்டல்கள் பல ஆண்டுகளாக அங்கேயே இருக்கின்றன. 10 ஆண்டுகளுக்கு முன்பு அங்கு கன்வார் யாத்திரை நடக்கவில்லையா? அப்போது அந்த யாத்திரை அமைதியாக நடக்கும். ஆனால், இப்போது மட்டும் ஏன் இப்படியெல்லாம் நடக்கிறது. யோகி ஆதித்யநாத் அரசாங்கம், கடைக்காரர்களிடம் ஆதார் அட்டையை கேட்கிறார்கள். அவர்கள், கடைக்காரர்களின் பேண்டை கழற்ற செய்கிறார்கள். போலீஸ்காரர்கள்ம் தங்களுடைய வேலையைச் செய்து கடைக்காரர்களை துன்புறுத்துபவர்கள் கைது செய்ய வேண்டும். இந்த மக்கள் ஒரு காட்சியை உருவாக்கியுள்ளனர். அவர்கள் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவைக் கூட பின்பற்றுவது இல்லை. அவர்கள் எப்படி ஒருவரின் ஹோட்டல்களுக்குள் நுழைய முடியும்?.ஹோட்டலுக்குள் நுழைந்து ஒருவருடைய மதத்தை கேட்பது தவறு. அரசாங்கம் ஏன் எதுவும் செய்யவில்லை?” என்று கூறினார். 

Advertisment