திருப்பூரில் கர்ப்பிணிப் பெண்ணுக்குக் காலாவதியான குளுக்கோஸ் பவுடர் வழங்கியதால் தாய் சேய் நல மருத்துவமனையை முற்றுகையிட்ட குடும்பத்தார். மருத்துவர்கள் பற்றாக்குறை உள்ளதாகவும் புகார் எழுந்துள்ளது.

திருப்பூர் பெரியார் காலனி பகுதியைச் சேர்ந்தவர் முனியப்பன். இவரது மனைவி வான்மதி. இந்தத் தம்பதியருக்கு ஒரு குழந்தை உள்ள நிலையில், தற்போது வான்மதி ஐந்து மாத கர்ப்பிணியாக உள்ளார். இதன் காரணமாக, வான்மதி தனது கணவருடன் திருப்பூர் அவிநாசி சாலையில் உள்ள மாநகராட்சி டி.எஸ்.கே. மகப்பேறு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக சென்றிருக்கிறார். அப்போது, ஸ்கேன் எடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் வான்மதியிடம் கூறியுள்ளனர். ஆனால், அவருக்கு நீர்ச்சத்து குறைவாக இருந்ததால், ஓ.ஆர்.எஸ். குளுக்கோஸ் பவுடரைக் கொடுத்து, இதனைக் குடித்துவிட்டு ஒரு மணி நேரத்திற்குப் பிறகு மீண்டும் பரிசோதனை செய்யலாம் என்று தெரிவித்துள்ளனர்.

அதன்படி, வான்மதி மருத்துவமனையில் வழங்கப்பட்ட ஓ.ஆர்.எஸ். குளுக்கோஸ் பவுடரைப் பிரித்து, மருத்துவமனை முன்பு அமர்ந்து குடிப்பதற்காகத் தயாரானபோது, அது நிறம் மாறிய நிலையில் இருந்திருக்கிறது. இதையடுத்து, வான்மதி நிறம் மாறிய ஓ.ஆர்.எஸ். குளுக்கோஸ் பவுடரை எடுத்துக்கொண்டு மருத்துவரிடம் சென்று கேட்டுள்ளார். அதற்கு அந்த மருத்துவர், “அதைத் தூக்கி எறிந்துவிட்டு மற்றொரு பாக்கெட்டை எடுத்துக் குடி” என்று அலட்சியமாகப் பதிலளித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த வான்மதி, ஓ.ஆர்.எஸ். பவுடரின் தயாரிப்பு மற்றும் காலாவதி தேதிகளைச் சரிபார்த்தபோது, பாக்கெட்டின் பின்புறம் குறிப்பிடப்பட்டிருந்த தேதியின்படி அது இரண்டு மாதங்களுக்கு முன்பு காலாவதியாகியிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, வான்மதி தனது உறவினர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களுக்கு தகவல் தெரிவித்தார். மேலும், காலாவதியான ஓ.ஆர்.எஸ். குளுக்கோஸ் பவுடரை வழங்கிய டி.எஸ்.கே. மகப்பேறு மருத்துவமனை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வான்மதியின் குடும்பத்தினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதுகுறித்து திருப்பூர் மாநகராட்சி நகர் நல அலுவலரிடம் கேட்டபோது, கவனக்குறைவாகச் செயல்பட்டவர்கள் மீது விசாரணை நடத்தப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.

Advertisment

காலாவதியான குளுக்கோஸ் பவுடரை கர்ப்பிணிப் பெண்ணுக்கு வழங்கிய சம்பவம் மருத்துவமனை வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.