கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் மல்லப்பள்ளியை சேர்ந்த 10 மாதக் குழந்தை ஆலின் ஷெரின் ஆபிரகாம் ஆவார். இந்த குழந்தை கடந்த 5ஆம் தேதி நடந்த சாலை சாலை விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்தார். இதனையடுத்து அக்குழந்தையின் பெற்றோர், அவரது உடல் உறுப்புகளைத் தானமாக வழங்க முடிவெடுத்தனர். அதன்படி அவரது உறுப்புகள் கொச்சியில் உள்ள மருத்துவமனையில் உடலில் இருந்து அறுவை சிகிச்சை மூலம் எடுக்கப்பட்டு, போலீஸ் பாதுகாப்புடன் திருவனந்தபுரத்திற்கு கொண்டு செல்லப்பட்டன. இதய வால்வு, கல்லீரல் மற்றும் சிறுநீரகங்கள் பல்வேறு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த உடல் உறுப்பு தானத்தின் மூலம், இரண்டு குழந்தைகள் உட்பட நான்கு நோயாளிகளுக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளன. அவரது கண்கள் மற்றும் பிற உறுப்புகளும் தானம் செய்யப்பட உள்ளன. இதனையடுத்து குழந்தையின் இறுதிச்சடங்கு இன்று (15.02.2026) பிற்பகல் 3 மணிக்கு நெடுங்கடாப்பள்ளி செயின்ட் தாமஸ் சிஎஸ்ஐ சர்ச்சில் நடைபெற உள்ளது. கேரளாவின் மிக இளவயது உறுப்பு தானம் செய்த பெருமை ஆலின் ஷெரினுக்கு கிடைத்துள்ளது.
இந்நிலையில் கேரள மாநிலத்தின் இளவயது உறுப்பு தானம் செய்பவர் என அங்கீகரிக்கப்பட்ட, அலின் ஷெரின் ஆபிரகாமுக்கு அரசின் சார்பில் மரியாதை வழங்கக் கேரள அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து கேரள அரசு சார்பில் நேற்று (14.02.2026) வெளியிடப்பட்ட அறிக்கையில், இளம் வயது கொடையாளியின் அகால மரணத்திற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பெற்றோரின் இந்தச் செயல், இரக்கம் மற்றும் மனிதாபிமானத்தின் வெளிப்பாடு என்றும் அதில் விவரிக்கப்பட்டுள்ளது.
அதோடு அந்த அறிக்கையில் பத்தனம்திட்டா மாவட்ட ஆட்சியர், கேரள மாநில முதலமைச்சர் மற்றும் மாநில அரசின் சார்பில் குழந்தையின் உடலுக்கு மலர்வளையம் வைக்க ஏற்பாடு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளார். மேலும், அரசு மரியாதை செலுத்தும் விதமாக, போலீஸ் மரியாதைகளை வழங்க பத்தனம்திட்டா மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. கேரள அரசின் இந்த நடவடிக்கை உறுப்பு தானத்தை ஒரு உன்னதமான செயலாக மாநில அரசு அங்கீகரிப்பதையும், மனிதர்களின் உயிர்காக்கும் இந்த மகத்தான செயலைச் செய்த இளம் கொடையாளியின் நினைவைப் போற்றும் வகையில் உள்ளது.
Follow Us