Orange alert for Tamil Nadu due to Cyclone Montha
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதே சமயம் வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி புயலாக மாறினால் அதற்கு தாய்லாந்து நாடு பரிந்துரைத்த மோன்தா (Montha) என்று பெயரிடப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், தென்கிழக்கு வங்கக் கடலில் இன்று (27-10-25) அதிகாலை 2:30 மணியளவில் மோன்தா புயல் உருவானது. சென்னைக்கு கிழக்கே - தென்கிழக்கே சுமார் 600 கிமீ தொலைவில் மையம் கொண்டுள்ள புயல் சின்னம், நாளை காலைக்குள் தீவிர புயலாக வலுப்பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர், நாளை மாலை அல்லது இரவு நேரத்தில் மச்சிலப்பட்டினம் - கலிங்கப்பட்டினம் இடையே ஆந்திரப் பிரதேச கடற்கரை பகுதியில் கரையை கடக்க வாய்ப்புள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரையை கடக்கும் பொழுது அதிகபட்சமாக மணிக்கு 90-100 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். தென்கிழக்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள மோன்தா புயல் தமிழகம் மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இன்று காலை முதல் மழை பெய்து வருகிறது. குறிப்பாக, இரு மாநிலங்களில் உள்ள கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
இந்த நிலையில், தமிழகத்திற்கு ஆரஞ்ச் அலர்ட்டும், ஆந்திரப் பிரதேசத்துக்கு ரெட் அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதால் இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்ச் அலர்ட் விடுத்துள்ளது. அதே போல், ஆந்திரப் பிரதேசத்தில் இன்று முதல் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
Follow Us