தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள சூழலில் அடுத்த ஆறு நாட்களுக்கு பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்யும் என தென்மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் அமுதா தெரிவித்திருந்தார்.

Advertisment

இந்த நிலையில், தமிழ்நாட்டில் இன்று (21-10-25) ஏழு மாவட்டங்களில் மிக கனமழைக்கும், சென்னையில் கனமழைக்கும் வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்று காற்றதழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும் என்றும் நாளை (22-10-25) காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் ஏற்கெனவே அறிவித்திருந்தது. இதன் காரணமாக ராமநாதபுரம், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் தஞ்சாவூர், கடலூர் மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Advertisment

இது போல சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளது. கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களிலும், சிவகங்கை, மதுரை, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களிலும் இன்று கனமழை நீடிக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் நாளையும், நாளை மறுநாளும் மிக கனமழை பெய்யக்கூடும் என ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதே போல், ராணிப்பேட்டை மற்றும் வேலூர் மாவட்டங்களில் நாளையும், நாளை மறுநாளும் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் விழுப்புரம், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் நாளை மிக கனமழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, தமிழக கடலோர பகுதிகளான வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளிலும், தெற்கு வங்கக்கடல் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளிலும் மணிக்கு 55கி.மீ வேகம் வரை சூரைக்காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது. 

Advertisment