தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. தலைமையில் அவரது ஆதரவாளர்களோடு கடந்த ஜூலை மாதம் 31ஆம் தேதி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு தனது உறவை முறித்துக் கொண்டுள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இனி தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு இடம்பெறாது. எந்த கட்சியுடனும் கூட்டணி என்பது இன்றைய நிலையில் இல்லை. எதிர்காலத்தில் நிலைமைகளுக்கேற்ப கூட்டணியை முடிவு செய்யவும் தீர்மானிக்கப்பட்டது என முடிவெடுக்கப்பட்டது. பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக முடிவு எடுக்கப்பட்ட அன்று மாலையே தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்து இருந்தது பரபரப்பு ஏற்படுத்தி இருந்தது.

இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனிடம் ஓபிஎஸ், பாஜக கூட்டணியில் இருந்து விலகியது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ''ஓ.பன்னீர்செல்வம் இந்த முடிவை எடுத்தது தனிப்பட்ட முறையில் எனக்கு வருத்தத்தை அளிக்கிறது. அவர் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலக முடிவெடுத்தது துரதிஷ்டவசமானது. அந்த முடிவுக்கு அவர் தள்ளப்பட்டிருக்கக் கூடாது என்பதுதான் என்னுடைய கருத்து. உலகத்துக்கே தெரியும் அந்த நிலைக்கு ஓபிஎஸ் தள்ளப்பட்டதற்கு யார் காரணம் என்று. 

அவரை மீண்டும் சமாதானப்படுத்தி எங்கள் கூட்டணிக்கு கொண்டுவர டெல்லியில் உள்ள பாஜக தலைவர்கள் முயற்சிக்க வேண்டும் என்பதுதான் உங்கள் மூலமாக நான் வைக்கின்ற வேண்டுகோள். பன்னீர்செல்வம் எங்கள் கூட்டணியில் இருந்து கனத்த இதயத்தோடு வெளியேறி இருக்கிறார். அவருடைய ஆதங்கங்கள் என்ன என்பது ஊடகத்தைச் சேர்ந்தவர்கள், அரசியலில் உள்ளவர்கள், பொதுமக்கள் என எல்லோருக்கும் தெரியும். அவரை எங்கள் கூட்டணிக்கு மீண்டும் கொண்டு வருவதற்கு டெல்லியில் உள்ள பாஜக தலைவர்கள் முயற்சி எடுக்க வேண்டும் என்றுதான் இந்த நேரத்தில் சரியாக கருத்தாக இருக்குமே தவிர அதைத் தாண்டி போஸ்ட்மார்ட்டம் பண்ணுவதை நான் விரும்பவில்லை. நான் ஓபிஎஸ் இடம் தொடர்ந்து பேசிக் கொண்டுதான் இருக்கிறேன். இது தொடர்பாக டெல்லியில் உள்ளவர்களிடம் சொல்லிக் கொண்டுதான் இருக்கிறேன்'' என்றார்.