மத்திய அமைச்சரும் தமிழ்நாடு பாஜக தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயல் இன்று (23.12.2025) சென்னைக்கு வருகை தந்திருந்தார். இந்த பயணத்தின் ஒரு பகுதியாக எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமியுடன், பியூஸ் கோயல் ஆலோசனை நடத்தினார். அப்போது தொகுதிப் பங்கீடு தொடர்பாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயலிடம், எடப்பாடி பழனிச்சாமி பட்டியல் ஒன்றைக் கொடுத்துள்ளார். அந்த பட்டியலில் அதிமுக 170 இடங்கள், பாஜக 23 இடங்கள், பாமக 23 இடங்கள் மற்றவை (தேமுதிக 6 இடங்கள், அமமுக 6 இடங்கள், ஓ.பி.எஸ். 3 இடங்கள்) 18 இடங்கள்” என்று தெரிவிக்கப்பட்டது. 

Advertisment

அதே சமயம் அமமுக பொதுச் செயலாளர் தினகரன் மற்றும் முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம் ஆகியோருடன் பாஜகவே பேச்சுவார்த்தை நடத்திக் கொள்ளட்டும் என அதிமுக சார்பில் தெரிவிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அதோடு தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஓ. பன்னீர்செல்வம், டிடிவி தினகரனை இனைக்க எடப்பாடி பழனிசாமி சம்மதம் தெரிவித்திருப்பதாகவும் தகவல் வெளியாகியிருந்தது.  இத்தகைய பரபரப்பான் அரசியல் சூழலில் தான் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றத் தொண்டர்கள் உரிமை மீட்புக் கழகத்தின் ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான ஓ. பன்னீர்செல்வம் சென்னையில் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். 

Advertisment

அதனைத் தொடர்ந்து ஓ. பன்னீர்செல்வம் பேசுகையில், “அதிமுக என்ற மாபெரும் இயக்கத்தைப் படு பாதாளத்திலே  தள்ளி வைத்து இன்றைக்கு அதிமுகவில் உள்ள அனைத்து தொண்டர்களும் வெம்பி வதங்கி என்ன செய்வது என்றே திக்கு முக்கு ஆடிக் கொண்டிருக்கிறார்கள். அந்த நிலையை உருவாக்கிய பழனிச்சாமிக்கு வருகின்ற காலங்களில் நாம் சரியான பாடத்தைப் புகட்ட வேண்டும் என்பதுதான் இன்றைய வரலாறு. நான் நெடுநேரமாக உங்களுடைய கருத்துக்களை உணர்வுகளை உணர்ச்சிகளை நீங்கள் அனைவரும் தெரிவித்திருக்கிறீர்கள்.

பல கூட்டங்களில் நாம் பல்வேறு பிரச்சினைகளைப் பேசி முடித்துவிட்டோம். இன்றைக்கு மக்கள் நம் மீது மிகுந்த அக்கறை கொண்டிருக்கின்றார்கள் என்பதுதான் உண்மை. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆட்சி ராமச்சந்திரன், இங்கு உணர்ச்சி பிழம்பாக வெளிப்படுத்திய கருத்துக்களை நான் அப்படியே முன்மொழிகிறேன். கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் எரிமலையாக வெடித்த  கருத்துக்களை நானும் வழிமொழிந்து நீங்களும் வழிமொழிந்து ஏகமானதாகத் தீர்மானம் நிறைவேற்றுவோம். இனிவரும் காலங்களில் தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற ஒரே ஒற்றை சொல்லை நிறுத்தி வருகை புரிந்து ஆதரவு தந்த அத்தனை பேருக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்து விடைபெறுகிறேன்” எனப் பேசினார். 

Advertisment