தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளருமான ஓ. பன்னீர்செல்வம் தேர்தல் கூட்டணி தொடர்பாகத் தனது சொந்த ஊரான தேனி மாவட்டம் பெரியகுளத்தில் தனது ஆதரவாளர்களுடன் கடந்த மாதம் 29ஆம் தேதி (29.01.2026) ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு ஓ. பன்னீர்செல்வம் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “பிரிந்து கிடக்கக்கூடிய அதிமுக சக்திகள் ஒன்றிணைய வேண்டும். யாராலும் வெல்ல முடியாத இயக்கமாக அதிமுகவை ஜெயலலிதா உருவாக்கினார்.
அந்த நிலையை மீண்டும் உருவாக்க வேண்டும். அதற்கான போராட்டம் தான் எங்கள் சட்டப் போராட்டம் ஆகும். அதிமுகவை மீட்க நாங்கள் போராடிக் கொண்டிருக்கிறோம். அதிமுக ஒன்றிணைய நான் ரெடி. அதற்கு டிடிவி தினகரனும், அவருடைய அருமை அண்ணன் எடப்பாடி பழனிசாமியும் ரெடியா? என்று கேட்டுச் சொல்லுங்கள்” எனத் தெரிவித்திருந்தார். இத்தகைய சூழலில் தான் அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது அவரிடம் செய்தியாளர்கள் இது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், “நான் இது குறித்து பலமுறை விளக்கம் அளித்துவிட்டேன். இது போன்று 3 முதல் 4 வருடங்களாகக் கேட்டுக்கொண்டு தான் இருக்கிறார். ஏற்கனவே அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் ஏக மனதாக எடுக்கப்பட்ட முடிவு ஆகும். ஓ. பன்னீர்செல்வம் அடிப்படை உறுப்பினராக இருந்து நீக்கப்பட்டு விட்டார். அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதனால் அவரை கட்சியில் சேர்ப்பதற்கு எந்தவித வாய்ப்பும் இல்லை. ஓ. பன்னீர்செல்வத்தை அடிப்படை உறுப்பினராக இருந்து நீக்கப்பட்டது என்பது பொதுச்செயலாளர் எடுத்த முடிவு அல்ல. 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்களால் எடுக்கப்பட்ட முடிவு” எனத் திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் ஓ. பன்னீர்செல்வத்திடம், செய்தியாளர்கள், “அரசியலில் அடுத்த கட்ட நகர்வு குறித்து எப்போது அறிவிக்க போகிறீர்கள்?. தை மாதம் சொல்கிறேன் என்று சொல்லிருந்தீர்கள் தை மாதம் முடிய போகிறது” எனக் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளிக்கும் வகையில் ஓ. பன்னீர்செல்வம், “தை மாதம் முடிய 9 நாட்கள் உள்ளன. தேர்தல் நடக்க இன்னும் 3 மாதம் (மாதங்கள்) உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
Follow Us