பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 118வது பிறந்த நாள் விழா மற்றும் 63வது குருபூஜை, ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் இன்று (30.10.2025) நடைபெற்று வருகிறது. இதனையொட்டி முத்துராமலிங்க தேவரின் குரு பூஜையில் கலந்து கொள்ள மதுரை மாவட்டம் கோரிப்பாளையத்திற்கு அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனும், முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வமும் தனித்தனியாக காரில் வந்திருந்தனர்.

Advertisment

அங்குள்ள ஹோட்டல் ஒன்றில் இருவரும் சந்தித்து பேசினர். அதன் பின்னர் அவர்கள் இருவரும் பசும்பொன்னுக்கு ஒரே வாகனத்தில் புறப்பட்டுச் சென்றனர். அதன் தொடர்ச்சியாக பசும்பொன் அருகே செங்கோட்டையன், ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் அமமுக பொதுச் செய்லாளர் டிடிவி தினகரனை சந்தித்து பேசினர். இதனையடுத்து முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் ஓ. பன்னீர்செல்வம், டிடிவி தினகரன், செங்கோட்டையன் ஆகியோர் கூட்டாக முத்துராமலிங்க தேவருக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 

Advertisment

அதனைத் தொடர்ந்து  ஓ. பன்னீர்செல்வம் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், “அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை மீட்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தோடு நம்பிக்கையோடு இன்றைக்குக் கூடியிருந்து முத்துராமலிங்க தேவரின் நினைவிடத்தில் சபதம் மேற்கொண்டுள்ளோம். அனைவரும் ஒருங்கிணைந்து ஒரே குடையின் கீழ் நின்று மீண்டும் எம்ஜிஆர், ஜெயலலிதாவின் ஆட்சியைத் தமிழகத்திலே நிறுவிட வேண்டும் என்ற சபதத்தை இன்றைக்கு மேற்கொண்டிருக்கின்றோம். 

அதற்கு அத்தாட்சியாகத்தான் இன்றைக்குக் குழுமி இருக்கின்ற அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனும், நம்முடைய கொங்கு நாட்டின் தங்கம் அண்ணன் செங்கோட்டையனும் இன்றைக்கு இங்கே பணித்திருக்கின்றோம். இந்த முயற்சி தொடர்ந்து நடைபெற்று, தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய ஆட்சியை வீட்டுக்கு அனுப்புகின்ற வகையில் எங்களுடைய ஒருங்கிணைப்பு இருக்கும் என்பதனை இந்த நல்ல நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்தார். 

Advertisment