“நடவடிக்கை எடுக்காதது தி.மு.க. அரசின் தவறு” - ஓ.பி.எஸ். குற்றச்சாட்டு!

ops

காலிப் பணியிடங்களை நிரப்பும் வகையில் அவ்வப்போது தேர்வினை நடத்தி பல் மருத்துவர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்காதது தி.மு.க. அரசின் தவறு என தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளருமான ஓ. பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த மக்களின் ஆரோக்கியம் மற்றும் சுகாதார முன்னேற்றத்தை மேம்படுத்துவதிலும், நகர்புற மக்களுக்கு இணையாக கிராமப்புற மக்களுக்கும் மருத்துவ வசதி கிடைக்கச் செய்ய வேண்டும் என்ற உன்னத நோக்கத்தினை எய்துவதிலும் முனைப்புடன் செயல்பட்டவர் ஜெயலலிதா. 

தமிழ்நாடு பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை பல் மருத்துவத்தில் சிறந்து விளங்கும் மையம் ( Centre of Excellence in Dentistry) என்ற தரத்திற்கு உயர்த்தியதோடு, புதிய பணியிடங்களை உருவாக்கிய பெருமைக்குரியவர் ஜெயலலிதா. ஆனால், கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேற்பட்ட தி.மு.க. ஆட்சியில் இதற்கு முற்றிலும் முரணான சூழ்நிலை நிலவுகிறது. தமிழ்நாட்டில் சென்னை, கடலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் அரசு பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில், கடலூர் மற்றும் புதுக்கோட்டை அரசு மருத்துவமனைகளில் போதிய பல் மருத்துவர்கள் இல்லாததன் காரணமாக, அந்த மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரத்தை ஏன் ரத்து செய்யக்கூடாது என விளக்கம் கேட்டு இந்திய பல் மருத்துவ கவுன்சில் அறிவிப்பினை அனுப்பியுள்ளது. 

இந்த நிலைமைக்கு பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் தள்ளப்பட்டதற்குக் காரணம் கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேற்பட்ட தி.மு.க. ஆட்சியில் ஒரு பல் மருத்துவர் கூட நியமனம் னம் செய்யப்படாததும், பதவி உயர்வு வழங்கப்படாததும் தான்.இந்திய பல் மருத்துவ கவுன்சில் விளக்கம் கேட்டு அறிவிப்பு அனுப்பியதையடுத்து, கடலூர் மற்றும் புதுக்கோட்டை அரசு மருத்துவமனைகளுக்கான அங்கீகாரத்தை தக்க வைத்துக் கொள்ளும் வகையில், தமிழ்நாட்டில் பல்வேறு அரசு பல் மருத்துவமனைகளில் பணியாற்றி வந்த 27 பல் மருத்துவர்களை கடலூர் மற்றும் புதுக்கோட்டை பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு இடமாற்றம் செய்து தி.மு.க. அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

உதாரணத்திற்குச் சொல்ல வேண்டுமென்றால், மருத்துவர் எஸ். இளங்கோவன் ஊத்தங்கரை அரசு மருத்துவமனையிலிருந்தும், மருத்துவர் என். அருண் பிரசாத்  அரக்கோணம் அரசு மருத்துவமனையிலிருந்தும், மருத்துவர் ஆர். துர்கா முசிறி அரசு மருத்துவமனையிலிருந்தும் கடலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் உள்ள ஒரே ஒரு பல் மருத்துவரும் மாற்றப்பட்டு இருக்கிறார். இதனால் அந்த மருத்துவமனையில் பல் மருத்துவரே இல்லாத அவல நிலை நிலவுவதாக கூறப்படுகிறது. தி.மு.க. அரசின் இந்த நடவடிக்கை பல அரசு மருத்துவமனைகளில் பல் மருத்துவர்களின் வேலைப் பளுவை அதிகரிக்க வழிவகுப்பதோடு, ஏழையெளிய மக்களுக்கு மிகப் பெரிய பாதிப்பினை ஏற்படுத்தும். மேலும், பல் மருத்துவர்களை அவர்களின் விருப்பத்திற்கு மாறாக மாற்றுவதன் மூலம் அவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகும் சூழ்நிலை உருவாகும். 

காலிப் பணியிடங்களை நிரப்பும் வகையில், அவ்வப்போது தேர்வினை நடத்தி பல் மருத்துவர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்காதது தி.மு.க. அரசின் தவறு. தி.மு.க. அரசு செய்த தவறுக்கு பல் மருத்துவர்களை தண்டிப்பது நியாயமற்ற செயல். பல் மருத்துவமனைகளை நாடி வரும் மக்களின் தேவை அதிகரித்துக் கொண்டே வருவதைக் கருத்தில் கொண்டு, நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப புதிய மருத்துவர் பணியிடங்களை உருவாக்கவும், காலிப் பணியிடங்களை அவ்வப்போது நிரப்பவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அரசு பல் மருத்துவர்கள் எதிர்பார்க்கிறார்கள். இதைச் செய்யாமல், அங்கீகாரத்தை தக்க வைத்துக் கொள்ள வேண்டுமென்பதற்காக அரசு பல் மருத்துவமனைகளிலிருந்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு பல் மருத்துவர்களை மாற்றம் செய்வது என்பது இந்திய பல் மருத்துவ கவுன்சிலை ஏமாற்றும் செயல். இது கடும் கண்டனத்திற்குரியது. 

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இதில் உடனடி கவனம் செலுத்தி, அரசு பல் மருத்துவமனைகள் மற்றும் அரசு பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் காலியாக உள்ள மருத்துவர் பணியிடங்களை மருத்துவ தேர்வு வாரியம் மூலம் விரைந்து நிரப்பவும், ஆட் குறைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதை தடுத்து நிறுத்தவும், பல் மருத்துவர்களுக்கான பதவி உயர்வை அவ்வப்போது அளிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார். 

dmk Dental hygiene Dentist Doctors mk stalin O Panneerselvam public health department tn govt
இதையும் படியுங்கள்
Subscribe