முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு கூட்டம், சென்னை வேப்பேரியில் கடந்த நவம்பர் மாதம் 24ஆம் தேதி (24.11.2025) நடைபெற்றது. இந்த கூட்டத்தில், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவானது அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு கழகமாக மாறி இருப்பதாக ஓ. பன்னீர்செல்வம் முன்னிலையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த கூட்டத்தில்ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில், “டிசம்பர் 15ஆம் தேதி நடக்கும் ஆலோசனை கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும்.
அவ்வாறு எடுக்கும் முடிவு தொண்டர்கள் விரும்பும் முடிவாக இருக்கும். டிசம்பர் 15ஆம் தேதிக்குள் அதிமுக இணைவது பற்றி முக்கிய முடிவை அறிவிக்க வேண்டும். டிசம்பர் 15ஆம் தேதி எடுக்கின்ற முடிவு அரசியல் வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக அமையும். நான் ஏற்றுக்கொண்டிருக்கின்ற ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு ஏற்ற வகையில் பல்வேறு பிரச்சனைகளுக்குள் நான் உள்ளே சென்று மீண்டும் அதை பூதாகரமாக வெளிப்படுத்த விரும்பவில்லை. நீங்கள் திருந்தவில்லை என்றால் டிசம்பர் 15ஆம் தேதி திருத்தப்படுவீர்கள்” எனப் பேசியிருந்தார்.
இத்தகைய பரபரப்பான அரசியல் சூழ்லில் ஓ.பன்னீர்செல்வம் நேற்று (02.12.2025) மாலை டெல்லிக்குப் புறப்பட்டுச் சென்றார். அங்கு அவர், பா.ஜ.க மூத்த தலைவர்களைத் சந்திக்க திட்டமிட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியிருந்தது. இதனிடையே, ஆடிட்டர் குருமூர்த்தியும் டெல்லி சென்றுள்ளதாகக் கூறப்பட்டது. அதன்படி டெல்லியில் முகாமிட்டுள்ள ஓ.பன்னீர்செல்வம், பா.ஜ.கவின் முக்கிய தலைவர்களைச் சந்தித்துப் பேசியதாகத் தகவல் வெளியாகி இருந்தது. இந்நிலையில் டெல்லியில் உள்ள ஓ. பன்னீர்செல்வம், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நேற்று (02.12.2025) சந்தித்து ஆலோசனை நடத்திய தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 20 நிமிடங்கள் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது இருவரும் என்னென்ன விசயம் குறித்துப் பேசப்பட்டது என்ற தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/12/03/ops-pm-dgl-2025-12-03-13-03-34.jpg)
ஓ. பன்னீர்செல்வத்தின் டெல்லி பயணமானது தமிழக அரசியல் வட்டாரத்தில் ஒரு பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது. அதே சமயம் 2வது நாளாக இன்றும் (03.12.2025) ஓ. பன்னீர்செல்வம் டெல்லியில் இருப்பார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக ஓ. பன்னீர்செல்வம், பா.ஜ.க. தலைமை அழைப்பிதழின் பெயரிலேயே அவர் நேற்று டெல்லி சென்றிருப்பதாகவும் கூறப்பட்டது. அதோடு அவரது அடுத்த கட்ட முடிவுகள் என்ன என்பது குறித்து வரும் 15ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ள மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் அறிவிப்பார் எனவும் கூறப்படுகிறது.
Follow Us