2026 சட்டமன்றத் தேர்தலையொட்டி பாஜக-அதிமுக கூட்டணி வைத்திருக்கும் நிலையில் பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து அண்மையில் ஓ.பன்னீர்செல்வம் வெளியேறி இருந்தார். அதனைத் தொடர்ந்து அவர் திமுக கூட்டணிக்கு செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகிறது. ஆனால் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு அதனை முற்றிலும் மறுத்திருந்தது.
பாஜக கூட்டணிக்குள் ஓ.பன்னீர்செல்வத்தை மீண்டும் கொண்டுவர வேண்டும் என டி.டி.வி.தினகரன் பல்வேறு செய்தியாளர்கள் சந்திப்பில் வலியுறுத்தி வந்தார். இதனால் மீண்டும் பாஜக கூட்டணிக்குள் ஓ.பன்னீர்செல்வம் வர இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி வருகிறது.
இந்நிலையில் மதுரை வண்டியூர் மாரியம்மன் கோவிலில் அன்னதானம் கொடுக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது 'மீண்டும் ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவிற்கு வர வாய்ப்பு இருக்கிறதா?' என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த ஆர்.பி.உதயகுமார், ''என்றும் ஓபிஎஸ் அண்ணன் எங்களுக்கு அண்ணன் தான். அதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் அவர் இதுபோன்று அனுதாபத்தை தேடுவதற்காகவோ, திசைத்திருப்புகிற வேலையாகவோ இனியும் அவர் முயற்சி செய்தால் அவருக்கு மேலும் தோல்விதான் கிடைக்குமே தவிர, அவர் நினைப்பதெல்லாம் நிச்சயமாக நடக்காது. தடம் புரண்டவர்கள், தடம்மாறிப் போனவர்கள் கருத்துக்களை தமிழ்நாட்டு மக்களும், தொண்டர்களும் என்றைக்கும் பொறுப்பெடுத்த மாட்டார்கள் என்பதுதான் தமிழக அரசியல் வரலாறு. அது ஓபிஎஸ் அண்ணனுக்கும் நன்றாக தெரியும். காலம் இருக்கிறது வெயிட் அண்ட் சி. காலம் நல்ல பதிலைத் தரும்'' என்றார்.