அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவை நடத்தி வரும் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் புதுக்கட்சி ஆரம்பிக்கும் யோசனையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில், தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வென்ற முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டதை தொடர்ந்து ஒருங்கிணைந்த தலைமையிலான அதிமுக தேவை என ‘அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு’வை நடத்தி வருகிறார். பாஜகவுடன் இணக்கமாக இருந்து வரும் ஓபிஎஸ் கடந்த 2024 நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் பலாப்பழம் சின்னத்தில் சுயேட்சையாக நின்று தோல்வியை கண்டார்.

இதற்கிடையில், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக- பாஜக கூட்டணி அமைந்துள்ளதால் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஓபிஎஸுக்கு பாஜக முக்கியத்துவம் கொடுப்பதில்லை என்று கூறப்படுகிறது. மேலும், அதிமுகவில் இனி ஒ.பி.எஸ் சேர்க்கப்பட மாட்டார் என எடப்பாடி பழனிசாமி உள்பட அதிமுக தலைவர்கள் உறுதியாக கூறு வருகின்றனர். இதனால், அதிமுக மீட்புக்குழு என்பதை விட தனியாக கட்சி ஆரம்பித்தால் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தங்களுக்கென ஒரு குறிப்பிட்ட சீட்களை பெறலாம் என்ற யோசனையில் ஓ.பி.எஸ் இருப்பதாக தகவல் வெளியானது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் இன்று (14-07-25) சென்னை வேப்பேரியில் பன்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில், அடுத்தகட்ட நகர்வுகள் தொடர்பாக தனது ஆதரவாளர்களுடன் முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ் முக்கிய ஆலோசனை நடத்தி வருகிறார். ஏற்கெனவே காஞ்சிபுரத்தைச் சேர்ந்த நிர்வாகி ஒருவர், ‘எம்.ஜி.ஆர் மக்கள் திராவிட முன்னேற்றக் கழகம்’ என்ற கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ளார். அந்த பெயரைப் பெற்று தனிக் கட்சி ஆரம்பிக்கலாமா? என்ற யோசனையில் ஓ.பி.எஸ் தனது நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.