தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளருமான ஓ. பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. தலைமையில் அவரது ஆதரவாளர்களோடு கடந்த ஜூலை மாதம் 31ஆம் தேதி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு விலகுவதாக முடிவு செய்யப்பட்டது. மேலும், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இனி தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு இடம்பெறாது என்றும், எந்த கட்சியுடனும் கூட்டணி என்பது இன்றைய நிலையில் இல்லை என்றும் எதிர்காலத்தில் நிலைமைகளுக்கேற்ப கூட்டணியை முடிவு செய்யவும் தீர்மானிக்கப்பட்டது எனவும் முடிவெடுக்கப்பட்டது.
பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக முடிவு எடுக்கப்பட்ட அன்று மாலையே தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை ஓ.பன்னீர்செல்வம் இரண்டு முறை சந்தித்துப் பேசினார். இது தமிழக அரசியலில் பெரும் விவாதப்பொருளாக மாறியுள்ளது. முதல்வரை சந்தித்ததால், ஓ.பன்னீர்செல்வம் திமுகவில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகி வந்தது. இதற்கிடையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகுவதாக ஒ.பன்னீர்செல்வத்தின் முடிவுக்கு அ.மு.மு.க தலைவர் டி.டி.வி.தினகரன், பா.ஜ.க மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் ஆகியோர் அதிருப்தி தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில், முதல்வரைச் சந்தித்து ஏன்? என்பது குறித்து ஓ.பன்னிர்செல்வம் தற்போது விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது, “மருத்துவமனையில் சிகிச்சை பெற்று இல்லம் திரும்பியவர்களை அவர்களது இல்லம் தேடிச் சென்று நலம் விசாரிப்பதும், உயிரிழந்தவர்களின் உறவினர்களை சந்தித்து துக்கம் விசாரித்து அஞ்சலி செலுத்துவதும் தமிழ்ப் பண்பாடு. இந்த வகையில், முதலமைச்சர் உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பல்வேறு சிகிச்சைகளுக்குப் பிறகு பூரண குணமடைந்து இல்லம் திரும்பிய நிலையில், அவரது வீட்டிற்கு நேரில் சென்று நலம் விசாரித்தேன். இதேபோன்று அவரது மூத்த சகோதரர் மு.க. முத்து மறைவு குறித்து இரங்கல் தெரிவித்தேன். இந்தச் சந்திப்பு தமிழ்ப் பண்பாட்டின் வெளிப்பாடு. என்னுடைய மனைவியும், என்னுடைய தாயாரும் இறந்தபோது, என்னை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியவர் முதலமைச்சர் என்பதை இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இந்தச் சந்திப்பில் எவ்வித அரசியலும் இடம்பெறவில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆனால், இந்தச் சந்திப்பை வைத்து என்னை தி.மு.க.வின் பி டீம் என்றும், நான் தி.மு.க.வுடன் கூட்டணி வைக்கப் போவதாகவும், தி.மு.க.வில் இணையப் போவதாகவும் பல்வேறு வதந்திகளை சமூக வலைதளங்கள் வாயிலாக பரப்பும் நடவடிக்கைகளை சிலர் மேற்கொண்டு வருகின்றனர். பத்திரிகைகள் மற்றும் ஊடகங்களும் இதுகுறித்த செய்திகளை கற்பனையாக வெளியிட்டு வருகின்றன. இதில் எள்ளளவும் உண்மையில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். என்னைப் பொறுத்தவரையில், எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் வழியில் பயணிப்பவன். 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள தமிழ்நாடு சட்டமன்றப் போவை பொதுத் தேர்தலில் ஜெயலலிதாவின் ஆட்சியை அமைக்க வேண்டுமென்பதுதான் எங்களின் நோக்கம் என்பதையும், அதற்கான நடவடிக்கைகளை எடுப்போம் என்பதையும் உறுதிபடத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ்ப் பண்பாட்டை நிலைநிறுத்தும் வகையில் நான் முதலமைச்சரை சந்தித்தேனே தவிர, இதில் துளியும் அரசியல் ஏதுமில்லை. இதனை வைத்து அரசியல் ஆதாயம் தேட நினைப்பவர்களைப் பார்க்கும்போது, பேரறிஞர் அண்ணாவின் பொன்மொழியான ‘பண்பு தெரிந்தவர்கள் பாராட்டுகிறார்கள். அது இல்லாதவர்களைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம்’ என்பதுதான் என் நினைவிற்கு வருகிறது. அடுத்தபடியாக, சமக்ரா சிக்ஷா திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டிற்கு அளிக்க வேண்டிய நிதியை நான் ஏதோ இப்போதுதான் வெளியிடுவதுபோல சில விமர்சனங்கள் எழுகின்றன. இது முற்றிலும் தவறு. சமக்ரா சிக்ஷா திட்டத்திற்கான நிதியை விடுவிக்குமாறு மத்திய அரசை வலியுறுத்தி 29-08-2024 அன்றே அறிக்கை வெளியிட்டவன் நான். இதேபோன்று, தந்தை பெரியார் மற்றும் பேரறிஞர் அண்ணாவைப் பற்றி விமர்சித்து பேசிய இந்து முன்னணிக்கு கண்டனம் தெரிவித்து 25-06-2025 அன்று அறிக்கை வெளியிட்டவன் நான்.
ஜெயலலிதாவை பா.ஜ.கவின் முன்னாள் தலைவர் விமர்சித்தபோது அதற்கு கண்டனம் தெரிவித்து 12-06-2023 அன்று அறிக்கை வெளியிட்டவன் நான். இதே போன்று, இருமொழிக் கொள்கைக்கு ஆதரவாக என்னுடைய கருத்தை பதிவு செய்து இருக்கிறேன். இஸ்லாமிய மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு வக்ப் வாரிய சட்டத்திற்கு எதிராக மாநிலங்களவையில் வாக்களிக்க உத்தரவிட்டேன். நான் எங்கு இருந்தாலும், தமிழக மக்களின் உரிமை, தமிழக மக்களின் நலன் என்று வந்துவிட்டால் ஜெயலலிதாவி வழியில் செயல்படக் கூடியவன் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/08/04/opsmk-2025-08-04-07-26-17.jpg)