சென்னை அம்பத்தூரில் நேற்று (08-08-2025) கலைஞரின் நினைவு நாள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் எம்.பி., “தமிழ்நாட்டில் கலைஞர் எதிர்ப்பு அரசியல் மட்டுமே 50 ஆண்டுகளாக இருக்கிறது. பார்ப்பனிய சக்திகளால் எதிர்கொள்ள முடியாத திமுகவை உடைத்து ஒரு இயக்கத்தை உருவாக்கி, திரைப்படத்தில் மிகப் பெரும் புகழைப் பெற்ற ஒரு ஆளுமையை எதிர்ப்புறத்தில் நிறுத்தி, கலைஞருக்கு எதிரான வெறுப்பு இங்கே திட்டமிட்டு உருவாக்கப்பட்டது.

எம்.ஜி.ஆர். கலைஞருக்கு எதிராக விமர்சனம் செய்தார், வெறுப்பு அரசியலை விதைத்தார், திராவிட இயக்கத்திற்குள் பார்ப்பனியத்தை ஊடுருவச் செய்வதற்கு காரணமாக இருந்தார். ஒரு பார்ப்பனப் பெண்மணியை ஒரு திராவிட இயக்கத்தின் தலைவராக ஆவதற்கு அவர் பாதை வகுத்துத் தந்தார் என்ற விமர்சனங்கள் ஒருபுறம் இருந்தாலும், ஒரு நன்மை வாய்ந்தது என்னவென்றால், தேசிய கட்சிகள் இங்கே காலூன்ற முடியாமல் தடுக்க முடிந்தது” எனப் பேசினார். இவரது பேச்சு, தற்போது தமிழக அரசியலில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

எம்.ஜி.ஆர். குறித்து திருமாவளவன் பேசியதற்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்தார். இது குறித்து பேசிய எடப்பாடி பழனிசாமி, “எம்.ஜி.ஆரை தமிழக மக்கள் தெய்வமாக நினைக்கிறார்கள். அப்படிப்பட்ட எம்.ஜி.ஆரை விமர்சித்தால், திருமாவளவன் அரசியலில் காணாமல் போய்விடுவார். அதிமுக ஜாதிக்கும் மதத்துக்கும் அப்பாற்பட்ட இயக்கம். எம்.ஜி.ஆர். காலத்திலும், ஜெயலலிதா காலத்திலும், இப்போதும் ஜாதிக்கும் மதத்துக்கும் அப்பாற்பட்ட கட்சியாகவே அதிமுக உள்ளது. அனைத்து ஜாதியினரும், மதத்தினரும் ஒற்றுமையாக உள்ளனர். இது, சிலருக்குப் பொறுக்கவில்லை; எரிச்சலை ஏற்படுத்துகிறது. ஏனென்றால், அவர்கள் அரசியலில் நினைத்தது நடக்கவில்லை. அந்த வெறுப்பு காரணமாகவே இப்படி வார்த்தைகளைக் கக்கியிருக்கிறார்” என்று கூறினார்.

இந்த நிலையில், திருமாவளவனின் பேச்சுக்கு முன்னாள் முதல்வர் ஒ. பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், திமுகவிடம் கூடுதல் தொகுதிகள் வாங்குவதற்காக திமுக தலைவரை திருமாவளவன் புகழ்ந்து பேசுவதில் தவறில்லை; ஆனால், மக்கள் செல்வாக்கு பெற்ற, சாதி மதங்களைக் கடந்த மறைந்த தலைவர்களை விமர்சிப்பது நாகரிகமற்ற செயல் என்று தெரிவித்தார்.