தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளருமான ஓ. பன்னீர்செல்வம் தேர்தல் கூட்டணி தொடர்பாகத் தனது சொந்த ஊரான தேனி மாவட்டம் பெரியகுளத்தில் தனது ஆதரவாளர்களுடன் இன்று (29.01.2026) ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் நிர்வாகிகளின் விருப்பத்தைத் துண்டுச் சீட்டில் எழுதித் தர ஓ. பன்னீர்செல்வம் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. அதற்குத் துண்டுச் சீட்டு வேண்டாம், நீங்கள் எடுக்கும் முடிவுக்குக் கட்டுப்படுவோம் என நிர்வாகிகள் அவரிடம் தெரிவித்ததாகவும் இதற்கு மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததால் கூட்டத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது

Advertisment

இந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு ஓ. பன்னீர்செல்வம் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “பிரிந்து கிடக்கக்கூடிய அதிமுக சக்திகள் ஒன்றிணைய வேண்டும். யாராலும் வெல்ல முடியாத இயக்கமாக அதிமுகவை ஜெயலலிதா உருவாக்கினார். அந்த நிலையை மீண்டும் உருவாக்க வேண்டும். அதற்கான போராட்டம் தான் எங்கள் சட்டப் போராட்டம் ஆகும். அதிமுகவை மீட்க நாங்கள் போராடிக் கொண்டிருக்கிறோம். ஆதரவாளர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க கடந்த நாடாளுமன்ற பொதுத் தேர்தலின் போது ராமநாதபுரத்தில் போட்டியிட முடிவெடுத்தேன். 

Advertisment

அதாவது தொண்டர்களின் ஆதரவை நிரூபிக்கவே தேர்தலில் போட்டியிட்டேன். என்னைத் தோற்கடிக்க எனக்கு எதிராக 6 பேரைப் பன்னீர்செல்வம் என்ற பெயரில் போட்டியிட வைத்தனர். இவ்வாறு தேர்தலில் பல்வேறு சூழ்ச்சிகள் நடைபெற்றன. சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று முடிவை இதுவரை எடுக்கவில்லை. தனிக்கட்சி தொடங்கும் எண்ணமும் இல்லை. அதிமுக ஒன்றிணைய நான் ரெடி. அதற்கு டிடிவி தினகரனும், அவருடைய அருமை அண்ணன் எடப்பாடி பழனிசாமியும் ரெடியா? என்று கேட்டுச் சொல்லுங்கள்” எனத் தெரிவித்திருந்தார். 

eps-mic-2
கோப்புப்படம்

இத்தகைய சூழலில் தான்  சேலம் மாவட்டம் ஓமலூரில் மாற்றுக் கட்சியைச் சேர்ந்தவர்கள் அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனையடுத்து எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார் அப்போது அவரிடம் செய்தியாளர்கள் இது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், “நான் இது குறித்து பலமுறை விளக்கம் அளித்துவிட்டேன். இது போன்று 3 முதல் 4 வருடங்களாகக் கேட்டுக்கொண்டு தான் இருக்கிறார். ஏற்கனவே அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் ஏக மனதாக எடுக்கப்பட்ட முடிவு ஆகும். 

Advertisment

ஓ. பன்னீர்செல்வம் (திரு. ஓ.பி.எஸ். அவர்கள்) அடிப்படை உறுப்பினராக இருந்து நீக்கப்பட்டு விட்டார். அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதனால் அவரை கட்சியில் சேர்ப்பதற்கு எந்தவித வாய்ப்பும் இல்லை.  ஓ. பன்னீர்செல்வத்தை அடிப்படை உறுப்பினராக இருந்து நீக்கப்பட்டது என்பது பொதுச்செயலாளர் எடுத்த முடிவு அல்ல.2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட  பொதுக்குழு  உறுப்பினர்களால் எடுக்கப்பட்ட முடிவு” எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.