‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில் பிரச்சாரச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள எடப்பாடி பழனிசாமி, தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்துக்கு 2 ஆம் தேதி இரவு 7:15 மணியளவில் வருகை தந்தார். அவருக்கு, தூத்துக்குடி தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் சண்முகநாதன் தலைமையில், மேடைப் பிள்ளையார் கோயில் முன்பு திரளான அதிமுகவினர் பூரண கும்பத்துடன் உற்சாக வரவேற்பு அளித்தனர். அங்கு திரண்டிருந்த மக்கள் கூட்டத்தின் இடையே, அதிமுக உரிமை மீட்புக் குழுவைச் சேர்ந்த ஸ்ரீவைகுண்டம் ஒன்றியச் செயலாளர் செந்தில் பெருமாள், தூத்துக்குடி மாவட்ட மகளிர் அணிச் செயலாளர் பார்வதி ஆகியோர் தலைமையில், கருப்புக் கொடியுடன் சிலர் தயார் நிலையில் காத்திருந்தனர்.
எடப்பாடி பழனிசாமியின் பிரச்சார வாகனம் மேடைப் பிள்ளையார் கோயில் அருகே வந்துகொண்டிருந்தபோது, அந்த வாகனத்தில் அமர்ந்திருந்த எடப்பாடி பழனிசாமியைப் பார்த்து, தயார் நிலையில் காத்திருந்த அதிமுக உரிமை மீட்புக் குழுவினர், கருப்புக் கொடியை உயர்த்திப் பிடித்து, “துரோகி எடப்பாடி ஒழிக! ஒழிக!” என உரத்த குரலில் கண்டனக் கோஷமிட்டனர். இதனை அங்கிருந்த கட்சியினர் பார்த்துவிட்டு, கண்டும் காணாதது போல் ஒதுங்கிக்கொண்டனர். கருப்புக் கொடியுடன் சிலர் கோஷமிடுவதைக் கண்டு அதிர்ச்சியடைந்த காவலர்கள், அதன்பிறகு உஷாராகி, அவர்களை உடனடியாக அங்கிருந்து அழைத்துச் செல்ல முற்பட்டனர். அவர்கள் மறுக்கவே, கெஞ்சி அழைத்துச் சென்றனர்.
எடப்பாடி பழனிசாமியின் கூட்டத்தில், கருப்புக் கொடியுடன் அதிமுக உரிமை மீட்புக் குழுவினர் கண்டனக் கோஷமிட்ட சம்பவம், தூத்துக்குடி மாவட்ட அதிமுக வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
செய்தியாளர் - எஸ்.மூர்த்தி
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/08/04/103-2025-08-04-18-09-13.jpg)