Advertisment

சுபான்ஷு சுக்லா பற்றிய விவாதத்தை புறக்கணித்த எதிர்க்கட்சிகள்; ராஜ்நாத் சிங் விமர்சனம்

shubanshu

Shubhanshu Shukla

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமும் (இஸ்ரோ), அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசாவும் இணைந்து விண்வெளி வீரர்களை விண்வெளிக்கு அனுப்பக்கூடிய திட்டத்தை ‘ஆக்ஸியம் ஸ்பேஸ்’ நிறுவனம் மூலம் செயல்படுத்தியது. ‘ஆக்சியம் - 4’ எனப் பெயரிடப்பட்ட இந்த திட்டத்தில் இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா உள்பட அமெரிக்கா, போலந்து, மற்றும் ஹங்கேரி ஆகிய  நாடுகளைச் சேர்ந்த 4  பேர் கடந்த ஜூன் 25ஆம் தேதி பகல் 12:01 மணிக்கு பால்கன் 9 ராக்கெட் மூலம் விண்வெளிக்கு வெற்றிகரமாகப் புறப்பட்டனர்.

Advertisment

கடந்த 1984ஆம் ஆண்டில் ராகேஷ் ஷர்மா என்ற இந்தியர் ரஷியாவின் சோயுஸ் விண்கலத்தில் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்ற நிலையில், 41 ஆண்டுகளுக்குப் பிறகு நேரடி இந்தியராக சர்வதேச விண்வெளிக்குச் செல்லும் இந்தியர் என்ற பெருமையை சுபான்ஷு சுக்லா பெற்றார். அவருக்கு நாடு முழுவதும் பாராட்டுக்கள் குவிந்தன. ஆக்சியம்-4 திட்டத்தின் விண்கலத்தை இந்தியாவின் குழு கேப்டன் சுபான்ஷு சுக்லா இயக்கிய நிலையில், கடந்த ஜூன் 26ஆம் தேதி சர்வதேச விண்வெளி நிலையில் வெற்றிகரமாக விண்கலம் நிலைநிறுத்தப்பட்டது. இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட 4 வீரர்களும் விண்வெளி ஆய்வு மையத்தில் ஆராய்ச்சி மேற்கொண்டனர்.

18 நாட்கள் சர்வதேச விண்வெளி மையத்தில் தங்கி ஆய்வுப் பணிகளை முடித்துவிட்டு கடந்த ஜூலை 14ஆம் தேது இந்திய நேரப்படி மாலை 4:35 மணிக்கு விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து டிராகன் விண்கலம் மூலம் சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட 4 வீரர்கள் பத்திரமாக பூமி வந்தனர். அதனை தொடர்ந்து அமெரிக்காவில் தங்கி பல்வேறு மருத்துவ சிகிச்சைப் பெற்று வந்த சுபான்ஷு, நேற்று (17-08-25) காலை இந்தியா வந்தார். டெல்லி விமான நிலையத்தில் வந்திறங்கிய சுபான்ஷு சுக்லாவுக்கு டெல்லி முதல்வர் ரேகா குப்தா, மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் உள்ளிட்டோர் வரவேற்பு அளித்தனர்.

விண்வெளி நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டு சாதனை படைத்த சுபான்ஷு சுக்லாவின் விண்வெளிப் பயணம் குறித்து சிறப்பு விவாதம் நடத்தி அவரை கெளரவிக்க வேண்டும் என்று நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு இன்று காலை தெரிவித்தார். மேலும், எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்பை நாடுவதாகவும் அரசியல் வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு ஒரு தேசிய வீரரைக் கொண்டாடுமாறு அவர் வலியுறுத்தினார். அதன்படி, நான்கு நாள் விடுமுறைக்குப் பிறகு, நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் இன்று (18-08-25) காலை நாடாளுமன்றத்தில் தொடங்கியது. கூட்டத்தொடர் தொடங்கிய சில நிமிடங்களிலேயே, வாக்காளர் பட்டியல் முறைகேட்டை கண்டித்து தேர்தல் ஆணையத்திற்கு எதிராக எதிர்க்கட்சி எம்.பிக்கள் எதிர்ப்பு தெரிவித்து அவையில் கோஷங்களை எழுப்ப தொடங்கினர். இதனால், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அவையை நாள் முழுவதும் ஒத்தி வைத்தார்.

Advertisment

எதிர்க்கட்சிகளின் நடவடிக்கையால் விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லாவின் விண்வெளி பயணம் குறித்து சிறப்பு விவாதம் நடத்த முடியாமல் போனதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது, “இன்று, இந்திய விமானப்படையின் குரூப் கேப்டன் சுபன்ஷு சுக்லா மற்றும் இஸ்ரோ மிஷன் பைலட் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ISS) பயணம் செய்து பின்னர் அவர் திரும்பியது குறித்து மக்களவையில் ஒரு சிறப்பு விவாதம் நடைபெற்றது. அப்போது எதிர்க்கட்சிகள் அவையில் கூச்சலை உருவாக்கி அதை செயல்பட அனுமதிக்காத விதம் மிகவும் துரதிர்ஷ்டவசமானது. இந்த விவாதம் இந்தியாவின் விண்வெளித் திட்டம் மற்றும் விக்ஸித் பாரதம் 2047 இல் அதன் பங்கு என்ற தலைப்பில் நடைபெற்றது. இது தேசிய சாதனை, நாட்டின் பெருமை, சுயமரியாதை மற்றும் எதிர்காலத்தில் அறிவியல் மற்றும் தேசிய பாதுகாப்பிற்கான வாய்ப்புகள் தொடர்பானது. எதிர்க்கட்சிகள் அதைத் தடுத்த விதம், இன்று அவர்களின் நடத்தை மிகவும் ஏமாற்றமளிக்கிறது. பிரதமர் மோடி தலைமையில், விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியா முன்னெப்போதும் இல்லாத உயரங்களை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. எதிர்க்கட்சிகள் விவாதத்தில் பங்கேற்று இந்தியாவின் விண்வெளித் திட்டத்திற்கான ஆக்கபூர்வமான மதிப்பாய்வு, விமர்சனம் மற்றும் பரிந்துரைகளை வழங்கியிருக்கலாம்” எனத் தெரிவித்துள்ளார். 

lok sabha monsoon session PARLIAMENT SESSION Shubhanshu Shukla
இதையும் படியுங்கள்
Subscribe