குடியரசுத் துணைத் தலைவர் ஜெக்தீப் தன்கர் மருத்துவக் காரணங்களுக்காக தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். இது தொடர்பான ராஜினாமா கடிதத்தை அவர் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவுக்கு அனுப்பியுள்ளார். 

கடந்த ஏப்ரல் மாதம் மாநில அரசு வாயிலாக ஆளுநர்கள் அனுப்பி வைக்கும் மசோதாக்களுக்கு 3 மாதங்களுக்குள் குடியரசுத் தலைவர் முடிவெடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தை ஜக்தீப் தன்கர் கடுமையாக விமர்சித்துப் பேசியிருந்தார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, ‘குடியரசுத் தலைவருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட முடியுமா? குடியரசுத் தலைவரை நீதிமன்றம் வழிநடத்தும் சூழ்நிலையை அனுமதிக்க முடியாது. ஜனநாயக சக்திகளுக்கு எதிரான அணு ஏவுகனையாக அரசியலமைப்பு சட்டப்பிரிவு 142 ஐ மாறியுள்ளது. உச்சநீதிமன்றம் சூப்பர் நீதிமன்றம் போல் செயல்படுகிறது. நாம் எங்கு செல்கிறோம்? நாட்டில் என்ன நடக்கிறது” எனப் பேசினார். இவருடைய கருத்து நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இந்த சூழ்நிலையில், தமிழக ஆளுநர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு அரசியல் சாசன விதிகளை மீறும் வகையில் உள்ளது எனத் தெரிவித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு 14 அரசியல் சாசன கேள்விகள் அடங்கிய குறிப்பை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடந்த மே 15ஆம் தேதி அனுப்பி இருந்தார். குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு அனுப்பிய கேள்வி குறித்து உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு இன்று (22-07-25) விசாரிக்கவுள்ளது.

இத்தகைய சூழலில், ஜக்தீப் தன்கர் நேற்று திடீரென தனது குடியரசுத் துணைத் தலைவர் பதவியை ராஜினாமா செய்திருப்பது தற்போது விவாதப் பொருளாக மாறியுள்ளது. மேலும், நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் நேற்று தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், ஜக்தீப் தன்கரின் இந்த திடீர் அறிவிப்பு பல்வேறு இந்திய அரசியலில் சலசலப்பை உருவாக்கியுள்ளது. ஒருபுறம் ஜக்தீப் தன்கருக்கும், பா.ஜ.க தலைவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளதா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. மறுபுறம், ஜக்தீப் தன்கரின் இந்த திடீர் ராஜினாமா முடிவு குறித்து எதிர்க்கட்சிகள் பல்வேறு சந்தேகங்களை எழுப்பி வருகின்றன.

Advertisment

ஜக்தீப் தன்கர் ராஜினாமா செய்யப்போவதாக அறிவித்த சில மணி நேரத்திலேயே  காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில் அவர் கூறுகையில், “இது விவரிக்க முடியாதது, அதிர்ச்சியளிக்கிறது. இன்று மாலை சுமார் 5 மணி வரை நான் அவருடன் பல எம்.பிக்களுடன் இருந்தேன். இரவு 7:30 மணிக்கு தொலைப்பேசியில் அவருடன் பேசினேன். எதிர்பாராத இந்த ராஜினாமாவால், கண்ணுக்குத் தெரிந்த விஷயங்களை விட இன்னும் நிறைய தெரிகிறது. இன்று (22-07-25) நடைபெறும் வணிக ஆலோசனைக் குழு கூட்டத்திற்கு ஜக்தீப் தன்கர் தலைமை தாங்கி நீதித்துறை தொடர்பான முக்கிய முடிவுகளை வெளியிட திட்டமிட்டிருந்தார். அவர் அரசாங்கத்தையும் எதிர்க்கட்சியையும் சமமாக நடத்தினார். இந்த விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலையிட வேண்டும். ஜக்தீப் தன்கர் தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். இது நாட்டின் நலனுக்காக இருக்கும்” என்று கூறினார்.