கடந்தாண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தல் மற்றும் மகாராஷ்டிரா தேர்தல் மற்றும் கடந்த 2023இல் நடந்த கர்நாடகா தேர்தல் ஆகிய தேர்தல்களில் பா.ஜ.கவுக்கு ஆதரவாக தேர்தல் ஆணையம் வாக்குத் திருட்டில் ஈடுபட்டு முறைகேடு செய்ததாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்.பியுமான ராகுல் காந்தி தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார். இதனிடையே, கடந்த 7ஆம் தேதி பா.ஜ.கவுக்கு ஆதரவாக தேர்தல் ஆணையம் வாக்குத் திருட்டில் ஈடுபட்டதற்கான தரவுகளை ஆதாரங்களோடு ராகுல் காந்தி வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.
அதாவது, 2024 மக்களவைத் தேர்தலில் பெங்களூரு மத்திய தொகுதியான மகாதேவபுரா தொகுதியில் 11,965 போலி வாக்காளர்கள், 40,009 போலி மற்றும் செல்லாத முகவரிகளைக் கொண்ட வாக்காளர்கள், 10,452 ஒற்றை முகவரி வாக்காளர்கள், 4,132 செல்லாத புகைப்படங்களைக் கொண்ட வாக்காளர்கள என 1,00,250 வாக்குகள் திருடப்பட்டுள்ளதாக ராகுல் காந்தி ஆதாரங்களை வெளியிட்டு குற்றம் சாட்டினார். தேர்தல் ஆணையம் இவ்வளவு பெரிய முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக தரவுகளுடன் ராகுல் காந்தி வைத்த குற்றச்சாட்டு நாடு முழுவதும் அதிர்வலையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இதற்கு இந்தியா கூட்டணித் தலைவர்கள் தேர்தல் ஆணையத்துக்கும் பா.ஜ.கவுக்கும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே, பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மற்றும் வாக்காளர் பட்டியல் முறைகேடு ஆகியவற்றை எதிர்த்து நேற்று (11-08-25) 300 எதிர்க்கட்சி எம்.பிக்களுடன் நாடாளுமன்றத்தில் இருந்து தேர்தல் ஆணையம் நோக்கி ராகுல் காந்தி பேரணி நடத்தினார். அனுமதியின்றி பேரணி நடத்தியதால் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்பட பல எம்.பிக்களை டெல்லி காவல்துறை கைது செய்து விடுவித்தது. இதனால் தலைநகர் டெல்லியே ஸ்தம்பித்தது. இருப்பினும், எதிர்க்கட்சி எம்.பிக்கள் இல்லாமல் வருமான வரி மசோதா, வரிவிதிப்புச் சட்டங்கள் மசோதா, தேசிய விளையாட்டு நிர்வாக மசோதா மற்றும் தேசிய ஊக்கமருந்து எதிர்ப்பு மசோதா ஆகிய 4 முக்கிய மசோதாக்களை மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.
இந்த பரபரப்பான சூழ்நிலையில், நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரின் 17ஆம் அமர்வு நாள் இன்று (12-08-25) தொடங்கியது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் கூடியதும், வாக்காளர் பட்டியல் முறைகேடு மற்றும் பீகார் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் ஆகியவற்றை எதிர்த்து எதிர்க்கட்சி எம்.பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட எம்.பிக்கள் கலந்து கொண்டனர். இதில் தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியலில் 124 வயதுடையவராகாப் பட்டியலிடப்பட்ட வாக்களர் மிண்டா தேவி உருவம் கொண்ட டி-ஷர்ட்களை பிரியங்கா காந்தி உள்ளிட்ட ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சில எம்.பிக்கள் அணிந்திருந்தனர். மேலும், விவசாயிகளை ஆதரிக்கும் விதமாக வெங்காயத்திற்கு குறைந்தபட்ச ஆதரவு விலை கோரி, பல எம்.பிக்கள் வெங்காயத்தால் செய்யப்பட்ட மாலைகளை அணிந்து போராட்டம் நடத்தினர்.