நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் ராணுவ ஜெனரல் எம்.எம். நரவனே எழுதிய நூலைக் குறிப்பிட்டுப் பேச விரும்பினார். அதற்கு சபாநாயகர் ஓம் பிர்லா அனுமதி அளிக்கவில்லை. அதே சமயம் பா.ஜ.க. உறுப்பினர் நிஷிகாந்த் துபே பல்வேறு நூல்களை மேற்கொள் காட்டி அவையில் பேசினார். அதற்கு எப்படி அனுமதி அளிக்கப்பட்டது என்று பல்வேறு கேள்விகளை எதிர்க்கட்சிகள் எழுப்பினர். அதோடு பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் மோடி இருக்கை அருகே ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதனையடுத்து, “பிரதமர் மோடி அவைக்கு ஏன் வரவில்லை?. அவர் ஏன் பதிலளிக்கப் பயப்படுகிறார்? என எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டை முன் வைத்து வருகின்றனர். இதற்குப் பிறகு அதற்கு ஓம் பிர்லா, “சபையில் என்ன நடந்தது என்பதை நாட்டு மக்கள் பார்த்தனர். நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவையில் பிரதமரின் நாற்காலியை எப்படி நெருங்கினார்கள் என்பதை அனைவரும் பார்த்தார்கள். ஏதேனும் அசம்பாவிதம் நடக்க வாய்ப்பிருக்கலாம் என்று எனக்குத் தகவல் கிடைத்தது. அப்படி ஒரு சூழ்நிலை ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள், சபைக்கு வர வேண்டாம் என்று பிரதமர் மோடியிடம் தெரிவித்தேன்.
மக்களவையில் சில உறுப்பினர்களின் நடத்தை முன்னெப்போதும் இல்லாத வகையில் கடந்த 4ஆம் தேதி (04.02.2026 - புதன்கிழமை) இருந்தது. பிரதமர் மோடியைத் தாக்க எதிர்க்கட்சிகள் தாக்கச் சதி செய்துள்ளனர். இதன் காரணமாக அவை ஒத்திவைக்கப்பட்டது. தவறுதலாக எதுவும் நடத்து விடக்கூடாது என்பதாலேயே நான் தான் பிரதமர் மோடியை அவைக்கு வர வேண்டாம் என்றேன்” எனத் தெரிவித்திருந்தார். இத்தகைய பரபரப்பான சூழலில் தான் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் எதிர்க்கட்சித் தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/02/09/lok-sabha-om-birla-2026-02-09-13-11-39.jpg)
இதில், சபாநாயகர் ஓம் பிர்லா ஒருதலைபட்சமாகச் செயல்படுகிறார் எனக் கூறி, எதிராக நம்பிக்கை இல்லாத தீர்மானம் கொண்டு வருவது குறித்து விவாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று (09.02.2026) காலை 11 மணியளவில் மக்களவை கூடியது, அப்போது, 19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இந்தியா - அமெரிக்கா இடையிலான ஒப்பந்தம் குறித்துப் பேச வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தினர். அதற்கு சபாநாயகர் ஓம் பிர்லா அனுமதிக்கவில்லை. கேள்வி நேரம் நடக்கட்டும் எனக் கூறினார்.
அதோடு எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேச அனுமதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் கோரிக்கை வைத்தனர். அதற்குக் கேள்வி நேரத்துக்குப் பிறகு விதிகளின்படி அனைவரும் பேச அனுமதிக்கப்படுவார்கள் என்று பிர்லா கூறினார். இருப்பினும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் மக்களவை ஒத்தி வைக்கப்பட்டது. எனவே மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
Follow Us