Opposition parties continue struggle in Parliament for against Bihar Special intensive revision
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் கடந்த 21ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரின் போது, கடந்த 4 நாட்களாக பஹல்காம் தாக்குதல், பயங்கரவாதிகளுக்கு எதிராக நடத்தப்பட்ட ஆபரேஷன் சிந்தூர், இந்தியா - பாகிஸ்தான் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் பேச்சு, பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம், ஜக்தீப் தன்கரின் திடீர் ராஜினாமா விவகாரம் உள்ளிட்ட விவகாரங்கள் விவாதம் நடத்த வேண்டும் என மக்களவை, மாநிலங்களவை என இரு அவைகளிலுமே எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். கடந்த 4 நாட்களாக எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்து அமளியில் ஈடுபட்டு வருவதால் நாடாளுமன்றம் முடங்கியுள்ளது.
இதனிடையே, பீகாரில் நடந்து வரும் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை மத்திய பா.ஜ.க அரசு நிராகரித்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. திருத்ததை நடத்தும் ஒரு சுயாதீன அமைப்பான தேர்தல் ஆணையத்தின் சார்பாக அரசாங்கம் பதிலளிக்க முடியாது என்று கூறி எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்திருப்பதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையில், சிறப்பு தீவிர திருத்தத்தின் ஒரு பகுதியாக பீகார் வாக்காளர் பட்டியலில் இருந்து 52 லட்சம் பேர் நீக்கியுள்ளதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கையை எதிர்த்தும், இது குறித்து விவாதம் நடத்த வேண்டும் என கடந்த 4 நாட்களாக எதிர்க்கட்சிகள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும், சிறப்பு தீவிர திருத்தம் குறித்து விவாதிக்க வலியுறுத்தி மாநிலங்களவையில் பல எதிர்க்கட்சி எம்.பிக்கள் அலுவல் இடைநீக்க அறிவிப்புகளை முன்வைத்துள்ளனர்.
இந்த நிலையில் பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை இன்றும் (25-07-25) எதிர்க்கட்சிகள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ள எதிர்க்கட்சிகள் எம்.பிக்கள் பீகாரில் மேற்கொள்ளப்படும் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு (SIR) எதிர்ப்பு தெரிவித்து கோஷங்களை எழுப்பினர். நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலையின் கீழ் எதிர்க்கட்சித் தலைவர்கள் ‘SIR’ என்று எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தி நின்றனர். வாக்காளர் பட்டியல் திருத்த நடவடிக்கையை நிராகரிப்பதன் அடையாளமாக, எதிர்க்கட்சித் தலைவர்கள் பதாகைகளை குப்பைத் தொட்டியில் வீசினர்.
முன்னதாக எதிர்க்கட்சிகளின் அமளியால் மக்களவை ஒத்திவைக்கப்பட்ட பிறகு நாடாளௌமன்றத்திற்கு வெளியே வந்த ராகுல் காந்தி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “தேர்தல் ஆணையத்திற்கு ஒரு செய்தியை சொல்ல விரும்புகிறேன். நீங்கள் தப்பிக்கப் போகிறீர்கள் என்றோ உங்கள் அதிகாரிகள் தப்பிக்கப் போகிறார்கள் என்று நீங்கள் நினைத்தால் அது தவறு. நீங்கள் தப்பிக்கப் போவதில்லை. ஏனென்றால் நாங்கள் உங்களைத் தேடி வருவோம். கர்நாடகாவில் ஒரு தொகுதியில் தேர்தல் ஆணையம் மோசடியை அனுமதித்ததற்கான 100 சதவீத ஆதாரம் எங்களிடம் உள்ளது. அதை உங்களுக்கு காட்ட முடிவு செய்துள்ளோம். அது 100 சதவீத ஆதாரமாகும். நாங்கள் ஒரு தொகுதியைப் பார்த்தோம், அதில் கண்டுபிடித்துள்ளோம். அந்த தொகுதியில் 50, 60, 65 வயதுடைய ஆயிரக்கணக்கான புதிய வாக்குகள் இருக்கின்றன. 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் வாக்காளர் பட்டியலில் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்’ என்று கூறினார்.