Opposition MPs give suspension notice in Parliament for discussion Bihar Special intensive revision
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் கடந்த 21ஆம் தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கடந்த 3 நாட்களாக பஹல்காம் தாக்குதல், பயங்கரவாதிகளுக்கு எதிராக நடத்தப்பட்ட ஆபரேஷன் சிந்தூர், இந்தியா - பாகிஸ்தான் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் பேச்சு, பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம், ஜக்தீப் தன்கரின் திடீர் ராஜினாமா விவகாரம் உள்ளிட்ட விவகாரங்கள் விவாதம் நடத்த வேண்டும் என மக்களவை, மாநிலங்களவை என இரு அவைகளிலுமே எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். கடந்த 3 நாட்களாக எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்து அமளியில் ஈடுபட்டு வருவதால் நாடாளுமன்றம் முடங்கியுள்ளது.
இதனிடையே, பீகாரில் நடந்து வரும் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை மத்திய பா.ஜ.க அரசு நிராகரித்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. திருத்ததை நடத்தும் ஒரு சுயாதீன அமைப்பான தேர்தல் ஆணையத்தின் சார்பாக அரசாங்கம் பதிலளிக்க முடியாது என்று கூறி எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்திருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சிகள் எம்.பிக்கள் இடைநீக்க நோட்டீஸை அளித்துள்ளனர். அதன்படி ஆம் ஆத்மி எம்.பி சஞ்சய் சிங், காங்கிரஸ் எம்.பி அகிலேஷ் பிரசாத் சிங், காங்கிரஸ் மாநிலங்களவை எம்.பி ரஞ்சீத் ரஞ்சன் ஆகியோர் பீகாரின் வாக்காளர் பட்டியல்கள் சிறப்பு தீவிர திருத்தத்தின் அரசியலமைப்பு மற்றும் தேர்தல் தாக்கங்கள் குறித்து விவாதிக்கக் கோரி விதி 267இன் கீழ் மாநிலங்களவையில் அலுவல் இடைநீக்க நோட்டீஸை அளித்துள்ளனர். நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரின் நான்காவது நாளான இன்று (24-07-25), கோவா மாநில சட்டமன்றத் தொகுதிகளில் பட்டியலிடப்பட்ட பழங்குடியினரின் பிரதிநிதித்துவத்தை மறுசீரமைத்தல் மசோதா மற்றும் வணிகக் கப்பல் மசோதா குறித்து விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட உள்ளது.
பீகார் மாநிலத்தில், இந்தாண்டு இறுதிக்குள் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. ஒட்டுமொத்த நாடே எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் இந்த தேர்தலுக்காக, அரசியல் கட்சித் தலைவர்கள் தற்போதில் இருந்தே ஆயுத்தமாகி வருகின்றனர். இந்த சூழ்நிலையில், பீகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த நடவடிக்கையைத் தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது. இந்த திருத்தத்தின்படி, 2003ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட வாக்காளர் பட்டியலில் இடம்பெறாத அனைவரும் தங்கள் பிறந்த தேதி, பிறந்த இடம் ஆகியவற்றுக்கான சான்றுகளை அளிக்க வேண்டும் எனவும், இவர்களில் 1981 ஜூலை 1க்குப் பிறகு பிறந்தவர்கள் தங்களுடைய பெற்றோரின் பிறப்பிடம் சார்ந்த சான்றுகளை வழங்க வேண்டும் என்றும், இந்த சான்றிதழ்கள் இல்லாதோர் வாக்களிக்க தகுதியில்லாதவர்களாக அறிவிக்கப்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
தேர்தல் ஆணையம் மேற்கொள்ளும் இந்த நடவடிக்கையால், 20% புலம்பெயர்ந்த வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்படுவார்கள் என்றும், இதனால் பலரும் பாதிக்கப்படுவார்கள் என்றும் இந்தியா கூட்டணிக் கட்சித் தலைவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். ஆனால், பீகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. அதன்படி, தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஒவ்வொரு வீடாகச் சென்று வாக்காளர் பட்டியலை சரிபார்த்து வருகிறார்கள். இந்த திருத்தத்தின் ஒரு பகுதியாக, வாக்காளர் பட்டியலில் இருந்து 52 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.