Advertisment

“ரெஸ்டோ பார் கொலைக்கு புதுச்சேரி முதல்வர் தான் காரணம்” - எதிர்க்கட்சித் தலைவர் சிவா பரபரப்பு குற்றச்சாட்டு!

rangasiva

Opposition Leader Siva accused Puducherry Chief Minister is responsible for the Resto Bar massacre

ரெஸ்டோ பார் கொலைக்கு புதுச்சேரி முதல்வரும், உள்துறை அமைச்சரும் தான் காரணம் என புதுச்சேரி எதிர்க்கட்சித் தலைவரும், புதுச்சேரி மாநில திமுக அமைப்பாளருமான சிவா பரபரப்பு குற்றச்சாட்டு வைத்துள்ளார்.

Advertisment

இது குறித்து புதுச்சேரி எதிர்க்கட்சித் தலைவர் சிவா வெளியிட்டுள்ள அறிக்கையில், “சுற்றுலாவிற்கு பெயர்போன புதுச்சேரி மாநிலம் இன்று, ஆட்சியாளர்களின் அதிகார வெறியாலும், நிர்வாக திறமையின்மையாலும் கலாச்சார சீரழிவை நோக்கியும், கொலை, கொள்ளை ஆகிய சட்டம்-ஒழுங்கு சீர்கேட்டை நோக்கியும் பயணிக்க தொடங்கி உள்ளது. இச்செயல் பொதுமக்களையும், சுற்றுலாப் பயணிகளையும் முகம் சுளிக்க வைக்கிறது. சுற்றுலாவை வளர்த்தெடுக்கிறோம் என்ற பெயரில் நகர் மற்றும் புறநகர் என புற்றீசல் போல் ரெஸ்டோ பார்களை திறந்துள்ள அரசு அவைகளை முறைப்படுத்தவோ, ஒழுங்காக கண்காணிக்கவோ, பொதுமக்களுக்கு பாதிப்பு வராமல், நிபந்தனைகள் விதிக்கவோ தவறிவிட்டது. இதுபற்றி ஓரிரு ஆண்டுகளாக பல்வேறு அரசியல் கட்சிகள், சமூக இயக்கங்கள் அரசுக்கு கண்டனங்கள் தெரிவித்தும், எங்களைப் போன்றவர்கள் சட்டமன்றத்தில் எதிரொலித்தும் இந்த அரசும், காவல் துறையும் இதை கண்டுகொள்ளவில்லை. காரணம் அரசு நிர்வாகம் ரங்கசாமியிடமும், காவல் நிர்வாகம் பாஜக அமைச்சர் நமச்சிவாயம் வசம் இருப்பதால் அவர்களின் அரசியல் மோதல் இந்த அலட்சியப் போக்கை உருவாக்கி இருக்கிறது.

கொலை நடந்த பிறகு அந்த ரெஸ்டோ பாரை மட்டும் மூடாமல் மேலும் உள்ள 12 ரெஸ்டோ பார்களை மூடுவதற்கு உத்தரவிட்டதுடன் பார்களில் பணம் வாங்கும் போலீசார் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். அப்படி என்றால் இங்கு நடக்கும் அத்துனை அநியாயங்களும் அமைச்சருக்கு ஏற்கனவே தெரிந்திருந்தும் இத்தனை காலம் மெத்தனமாக இருந்தது வன்மையாக கண்டிக்கத்தக்கதாகும். கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள் இவர்களின் எதிர்காலமே இதனால் சிதைந்து வருகிறது. சட்டமன்றத்திலும், அரசு விழாக்களிலும், பொது மேடைகளிலும் ரெஸ்டோ பார் கொடுப்பதை தனது சாதனையாக சொல்லி பெருமை கொள்ளும்

நமது முதல்வர், கலால் துறையை முறையாக கையாண்டு, தகுதி உள்ளவர்களுக்கு பார் அனுமதி கொடுக்க தவறிவுள்ளார். புதுச்சேரியை பெஸ்ட் புதுச்சேரியாக ஆக்குவோம் என்று ஆட்சிக்கு வந்தவர்கள் மாநிலத்தில் தொழிற்சாலைகளை நிறுவியும், புதிய வளர்ச்சித் திட்டங்களை கொண்டு வந்தும், மூடப்பட்ட பஞ்சாலை உள்ளிட்ட அரசு நிறுவனங்களை திறந்தும், இளைஞர்களுக்கு வேலை கொடுக்கும் கேந்திரத்தை உருவாக்கியும் இருப்பார்கள் என்றெல்லாம் எதிர்பார்த்து இருந்த நிலையில் ரெஸ்டோ பார்களை திறந்து கொலையை அரங்கேற்றி இருப்பது இந்த அரசின் ஒர்ஸ்ட் நிர்வாகத்தை  காட்டுகிறது.

Advertisment

ரெஸ்டோ பார்களில் வெறும் மதுவகைகள் மட்டுமின்றி, அரை நிர்வாண நடனங்களை நடத்தியும், கஞ்சா, ஹெராயின் போன்ற போதை பழக்கத்தை நுழைத்தும் மிகப்பெரிய கலாச்சார சீரழிவை ஏற்படுத்தி வருவது புதுச்சேரியில் அவசர நிலை பிரகடணத்திற்கு முன்பாக புழக்கத்தில் இருந்த விபச்சார விடுதிகளின் தாக்கத்தை இது நினைவூட்டுகிறது. இதுதான் இந்த அரசு புதுச்சேரி மக்களுக்கு செய்திருக்கின்ற சாதனையா?. ரெஸ்டோ பார் அனுமதி பெறுபவர்கள் உள்ளூர்காரர்கள், நடத்துபவர்கள் வெளி மாநிலத்தவர். ஒவ்வொரு பாரிலும் கொள்ளை இலாபம் ஈட்டுவதற்காக பவுண்சர்கள் என்று கூறும் ரவுடிகளையும், அடியாட்களையும் வைத்துக்கொண்டு, வெளியூரில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளையும் அடக்கி ஆள்வதின் உச்சம்தான் இந்த கொலை. புதுச்சேரி அமைதியான பூமி. அழகான பூமி. ஆன்மீக பூமி. இப்படிப்பட்ட ஆவலோடு ஒரு முறையாவது புதுச்சேரியை காணலாம் என்று நினைக்கின்ற மற்ற மாநில மக்கள் எல்லாம் இந்த கொலை நிகழ்ச்சியை கண்டு அதிர்ச்சி அடைந்து இது கொலைகார பூமி என்று எண்ணும் நிலைக்கு இந்த அரசு தள்ளிவிட்டது.

ரெஸ்டோ பாரில் என்னென்ன வசதிகள் இருக்க வேண்டும் என்று கலால் துறை நிர்ணயித்து இருக்கின்ற அத்துனை தகுதிகளும் உள்ளனவா என்றும் நேரத்தோடு மூடப்படுகிறதா என்றும் முறையாக கண்காணிக்க வேண்டும். தவறும் பட்சத்தில் அந்த பகுதியில் இருக்கின்ற கலால் மற்றும் காவல் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த கொலைக்கு முழுமையான பொறுப்பை கலால் துறையை தன்வசம் வைத்துள்ள முதல்வரும், காவல் துறையை வைத்துள்ள உள்துறை அமைச்சர் ஆகிய இருவருமே பொறுப்பு என்று நான் குற்றம் சுமத்துகிறேன். மீண்டும் இந்த ஒழுங்கீனம் தொடருமே ஆனால் மக்களை திரட்டி மாபெரும் போராட்டத்தை நடத்த நேரிடும்” எனத் தெரிவித்துள்ளார். 

Puducherry rangasamy siva
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe