பெண் சிவில் நீதிபதியை துன்புறுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்ட மாவட்ட நீதிபதியான ராஜேஷ் குமார் குப்தாவுக்கு சில தினங்களுக்கு மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக பதவி உயர்வு கிடைத்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நீதி தன்னை தோற்கடித்துவிட்டதாகக் கூறி பாதிக்கப்பட்ட பெண் சிவில் நீதிபதி வேதனையுடன் ராஜினாமா செய்திருந்தார். இது நாடு முழுவதும் அதிர்வலையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருந்தது.

இந்த பரபரப்பு அடங்குவதற்குள் பா.ஜ.கவைச் சேர்ந்த முன்னாள் பெண் செய்தி தொடர்பாளர் ஒருவரை மும்பை உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளதாக எழுந்த குற்றச்சாட்டு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்திய தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான மூத்த நீதிபதிகளைக் கொண்ட உச்ச நீதிமன்ற கொலீஜியம், நீதிபதிகளை நேர்காணல் செய்து நீதித்துறை நியமனங்களுக்கான பரிந்துரைகளை மத்திய அரசுக்கு அனுப்புகிறது. அந்த வகையில் கடந்த ஜூலை 28ஆம் தேதி உச்ச நீதிமன்ற கொலீஜியம் கூட்டம் நடைபெற்றது. அதில் வழக்கறிஞர்களான அஜித் பகவந்த்ராவ் கதேதங்கர், ஆர்த்தி அருண் சாத்தே மற்றும் சுசில் மனோகர் கோதேஸ்வர் ஆகிய மூன்று பேரை மத்தியப் பிரதேச உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கும் பரிந்துரைக்கு ஒப்புதல் அளித்து மத்திய அரசுக்கு அனுப்பி உள்ளது. .

இதில் வழக்கறிஞர் ஆர்த்தி அருண் சாத்தே, பா.ஜ.கவைச் சேர்ந்தவர் என்றும் அவர் 2023 -2024 இடையில் பா.ஜ.க செய்தித் தொடர்பாளராக பணியாற்றி வந்ததாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றனர். இது ஜனநாயகத்தின் மீது விழுந்த பெரிய அடி என்று கூறி ஆர்த்தி பா.ஜ.க செய்தி தொடர்பாளராக பணியாற்றியதற்கான ஆதாரங்களை வெளியிட்டு காங்கிரஸ், சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இது குறித்து சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரும் எம்.எல்.ஏவுமான ரோஹித் பவார் தனது எக்ஸ் பக்கத்தில், வழக்கறினர் ஆர்த்தி பா.ஜ.க செய்தி தொடர்பாளராக பணியாற்றியதற்கான ஆதாரங்களை வெளியிட்டு பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, ‘ஆளும் கட்சிக்காக பொது மேடையில் இருந்து வாதிடும் ஒருவரை நீதிபதியாக நியமிப்பது ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய அடியாகும். அரசியல் ரீதியாக தொடர்புடைய நபர்களை நேரடியாக நீதிபதிகளாக நியமிப்பது நீதித்துறையை ஒரு அரசியல் களமாக மாற்றுவதற்குச் சமம் அல்லவா? உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக நியமிக்கப்பட்ட ஒருவர், அரசியல் பின்னணியைக் கொண்டவராகவும், ஆளும் கட்சியில் ஒரு பதவியை வகித்தவராகவும் இருக்கும்போது, நீதி வழங்கும் செயல்முறை அரசியல் சார்பினால் கறைபடாது என்று யார் உத்தரவாதம் அளிப்பார்கள்? இந்த அரசியல் பிரமுகரை நீதிபதி பதவிக்கு நியமிப்பது தொடர்பாக மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும். இந்த விஷயத்தில் தலைமை நீதிபதி வழிகாட்டுதலையும் வழங்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

Advertisment

ஆனால், ஆர்த்தி கடந்தாண்டு ஜனவரியிலேயே செய்தித் தொடர்பாளர் பதவியில் இருந்து ராஜினாமா செய்துவிட்டதாகவும், எதிர்க்கட்சிகள் வைக்கும் குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்றும் மகாராஷ்டிரா பா.ஜ.க கூறி வருகிறது. முன்னாள் பா.ஜ.க செய்தித் தொடர்பாளரை மும்பை உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள விவகாரம் மகாராஷ்டிரா அரசியலில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.