'Operation Blue Star' wrong move - P. Chidambaram's comment creates stir Photograph: (congress)
மூத்த காங்கிரஸ் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் இந்திரா காந்தி நடத்திய 'ஆபரேஷன் ப்ளூ ஸ்டார்' தவறான நடவடிக்கை எனக் கூறியிருப்பது பேசு பொருளாகி இருக்கிறது.
1984 ஆம் ஆண்டு பொற்கோவிலில் தீவிரவாதிகள் பதுங்கி இருந்தது காரணமாக அவர்களை வெளியேற்றுவதற்காக 'ஆபரேஷன் ப்ளூ ஸ்டார்' என்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அப்போது ஆட்சியில் இருந்த இந்திரா காந்தி காவல்துறை மற்றும் ராணுவம் ஆகிய இரண்டையும் இணைத்து அமிர்தசரசில் 'ஆபரேஷன் ப்ளூ ஸ்டார்' என்ற நடவடிக்கையை மேற்கொண்டிருந்தார்.
சீக்கியர்களின் பொற்கோவில் அவர்களுக்கு மிகவும் புனிதமாக கருதப்படும் இடமாகும். இந்தநிலையில் காவல்துறையினர் மற்றும் ராணுவத்தினர் தீவிரவாதிகளை பிடிப்பதற்காக உள்ளே புகுந்தனர். இந்த நடவடிக்கை இந்திரா காந்திக்கு கடும் எதிர்ப்புகளை கொடுத்திருந்தது. அதனைத் தொடர்ந்து இந்திரா காந்தி அவருடைய மெய்க்காவலர்களாலேயே சுட்டுக் கொல்லப்பட்டார். அந்த மெய்க்காவலர்கள் சீக்கியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் 'ஆப்ரேஷன் ப்ளூ ஸ்டார்' காரணமாகவே இந்திரா காந்தி சுட்டுக் கொல்லப்பட்டார். இதற்கு இந்திரா காந்தி மட்டும் காரணமல்ல ராணுவம், காவல்துறை என அனைவரும் சேர்ந்தே இந்த தவறான முடிவை எடுத்தார்கள் என முன்னாள் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், கட்சியின் முன்னாள் தலைவரும், முன்னாள் பாரத பிரதமருமான இந்திரா காந்தியை குறித்து பேசியிருப்பது காங்கிரசில் சலசலப்பு ஏற்படுத்தி இருக்கிறது. இத்தனை வருடம் கழித்து இது போன்ற கருத்து ஏன் வெளியாகியிருக்கிறது என்ற பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.