தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூரில் அமைந்துள்ள கீழணையில் இருந்து ஒவ்வொரு வருடமும் சம்பா பாசனத்திற்காக செப்டம்பர் மாதம் தண்ணீர் திறப்பது வழக்கமாகும். இந்த நிலையில் இந்த ஆண்டு சம்பா பாசனத்திற்கு தண்ணீரை திறந்து வைக்கும் நிகழ்ச்சி கீழணையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கலந்து கொண்டு பாசனத்திற்கு தண்ணீரை திறந்து வைத்தார். அதே போல் வீராணம் ஏரி ராதா மதகில் பாசனத்திற்கு தண்ணீரை திறந்து வைத்தார்.
அதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கடலூர் மாவட்டம் பயன்பெறும் வகையில் வடவாறு, வடக்கு ராஜன் மற்றும் கஞ்சங்கொல்லை வாய்க்கால் மூலமும் கீழணை தெற்கு பிரிவிலிருந்து தெற்கு ராஜன், கும்கி மன்னியார், மேல ராமன் வாய்க்கால் மூலம் மயிலாடுதுறை மற்றும் தஞ்சை மாவட்டங்களுக்கு பாசன வசதி பெறும் வகையில் தண்ணீரை திறந்து வைத்துள்ளேன். இதில் கடலூர் மாவட்டத்திற்கு 92ஆயிரத்து 853 ஏக்கரும் மயிலாடுதுறை மாவட்டத்திற்கு 37 ஆயிரத்து 756 ஏக்கரும் தஞ்சை மாவட்டத்திற்கு 1294 ஏக்கர் என மொத்தம் 1 லட்சத்து 31 ஆயிரத்து 903 ஏக்கர் பயன்பெறும். திறக்கப்பட்ட நீர் வீராணம் ஏரி மற்றும் சேத்தியாதோப்பு அணைக்கட்டுகளில் சேமிக்கப்பட்டு சுற்றியுள்ள 120 கிராமங்களில் நிலத்தடி நீர் மட்டம் உயரும். வீராணம் ஏரியில் இருந்து சென்னை குடிநீருக்காக நாள் ஒன்றுக்கு 73 கனஅடி வீதம் வழங்கப்படுகிறது.
குறுவை சாகுபடிக்கு தேவையான இடுபொருட்கள் தரமான விதைகள், உரங்கள், இருப்பு வைக்கப்பட்டு விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக டெல்டா மாவட்டங்களில் கடந்த 50 ஆண்டுகால சாதனையாக தமிழகம் முழுவதும் ரூ 214 கோடி குறுவை தொகுப்பு வழங்கப்பட்டது. அதன் காரணமாக 6.9 லட்சம் ஏக்கர் பரப்பளவில் டெல்டா அல்லாத மாவட்டங்களில் 6.24 லட்சம் ஏக்கர் பரப்பளவில் தமிழ்நாடு முழுவதும் 12.33 லட்சம் ஏக்கர் சாகுபடி குறுவை செய்யப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபிஆதித்யா செந்தில்குமார், காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைச்செல்வன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் காந்தரூபன்,உதவி செயற்பொறியாளர்கள் கொளஞ்சியப்பன், ரமேஷ், விவசாய சங்க தலைவர்கள் இளங்கீரன், விநாயகமூர்த்தி, ரெங்கநாயகி உள்ளிட்டவர்கள் உடன் இருந்தனர்.