உலகம் முழுவதும் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ) வளர்ச்சி அபரிவிதமாக இருக்கிறது. பெரும்பாலான துறைகளில் தற்போது செயற்கை நுண்ணறிவு தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இது நமது வேலைகளைச் சுலபமாகவும், திறம்படவும் செய்து முடிக்கிறது. அதன் ஒரு பகுதியாக கடந்த 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அமெரிக்காவை சேர்ந்த ‘ஓபன் ஏ.ஐ’ என்ற நிறுவனம் ‘சாட்ஜிபிடி’ என்ற செயற்கை நுண்ணறிவை பொது மக்கள் பயன்படுத்தும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த செயற்கை நுண்ணறிவு வரவால், தகவல் தொழில்நுட்ப உலகில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்பட்டன. குறிப்பாக, மனிதர்கள் தொழில்நுட்பத்தில் செய்யக்கூடிய வேலைகளை, செயற்கை நுண்ணறிவின் மூலம் மிகவும் எளிதாக செய்ய முடியும். மேலும், இது கவிதைகள், கட்டுரைகள் மற்றும் கதைகள் எழுதும் திறன் படைத்தது என்பதுடன் மனிதனை போன்று கணினி குறியீடுகளையும் இதனால் எழுத முடிகிறது. இன்றைய இணையவாசிகள் தங்களுக்கு எந்த சந்தேகம் எழுந்தாலும், அதனை ‘சாட்ஜிபிடி’ என்ற ஏஐயில் போட்டு சில வினாடிகளிலேயே பதிலைப் பெறுகின்றனர். அந்த பதில், ஏற்கெனவே இணையத்தில் இருக்கும் தகவல்களின் அடிப்படையாக கொண்டதாகவே இருக்கிறது என்று விமர்சனமும் ஒரு பக்கம் எழுந்து வருகிறது.
இந்த நிலையில், ‘சாட்ஜிபிடி’ஐ அதிகம் நம்ப வேண்டாம் என ஓபன் ஏஐ நிறுவனத்தின் தலைமை செயல் தலைவர் சாம் ஆல்ட்மன் தெரிவித்துள்ளார். ஓபன் ஏஐ-யின் அதிகாரப்பூர்வ பாட்காஸ்டின் முதல் எபிசோடில் பேசிய சாம் ஆல்டமேன், “மக்கள் சாட்ஜிபிடி மீது மிக உயர்ந்த அளவிலான நம்பிக்கையை வைத்துள்ளனர் என்ற சுவாரஸ்யமான விஷயத்தை நான் கண்டறிந்தேன். ஏஐ என்பது மாயத்தோற்றம் கொண்டது. செயற்கை நுண்ணறிவு தவறான தகவல்களையும், கணிப்புகளையும் உருவாக்கக் கூடியதே. செயற்கை நுண்ணறிவு தவறுகளைச் செய்யும். எனவே, இதனை இந்த அளவுக்கு மக்கள் நம்ப வேண்டாம்” என்று தெரிவித்துள்ளார்.
எழுத்து, ஆராய்ச்சி, தகவல்கள் போன்ற உதவிக்காக சாட்ஜிபிடி-ஐ நம்பியிருக்கும் பலருக்கும், அதன் நிறுவனரே சாட்ஜிபிடி குறித்து இது போன்ற கருத்தை தெரிவித்துள்ளது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.