O,.Panneerselvam says The legal battle to restore AIADMK will continue
அதிமுக- பாஜக கூட்டணி மீண்டும் அமைந்துள்ளதால் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஓபிஎஸுக்கு பாஜக முக்கியத்துவம் கொடுப்பதில்லை என்று கூறப்படுகிறது. மேலும், அதிமுகவில் இனி ஒ.பி.எஸ் சேர்க்கப்பட மாட்டார் என எடப்பாடி பழனிசாமி உள்பட அதிமுக தலைவர்கள் உறுதியாக கூறு வருகின்றனர். இதனால், அதிமுக மீட்புக்குழு என்பதை விட தனியாக கட்சி ஆரம்பித்தால் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தங்களுக்கென ஒரு குறிப்பிட்ட சீட்களை பெறலாம் என்ற யோசனையில் ஓ.பி.எஸ் இருப்பதாக தகவல் வெளியானது.
இந்த பரபரப்பான சூழ்நிலையில் இன்று (14-07-25) சென்னை வேப்பேரியில் பன்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில், அடுத்தகட்ட நகர்வுகள் தொடர்பாக தனது ஆதரவாளர்களுடன் முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ் முக்கிய ஆலோசனை நடத்தினார்.
இந்த கூட்டத்தில் ஓ.பி.எஸ் பேசியதாவது, “அதிமுகவை மீட்டெடுப்பதற்கான சட்ட போராட்டம் தொடரும். எம்.ஜி.ஆர் எந்த நோக்கத்திற்காக இந்த இயக்கத்தை உருவாக்கினார் என்பதை மனதில் நினைத்து இன்று வரை நீங்கள், எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தந்து கொண்டிருக்கிறீர்கள். இந்த சட்ட போராட்டத்தில் உறுதுணையாக நின்ற அனைவருக்கும் நன்றி. அந்த நிலையில், நாம் இதுவரை நின்றிருக்கிறோம், எதிர்காலத்தையும். வென்றெடுப்போம். அரசியல் ரீதியான கட்சிகளுக்கு அந்த கட்சி சார்ந்த உறுப்பினர்கள் இருப்பார்கள். ஆனால், பொதுமக்களின் நன்மதிப்பை எந்த தலைவர்கள் பெறுகிறாரோ அவர்கள் தான் மக்களை ஆளுகின்ற நிலையை பெற முடியும். அதை தான் எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் கழகத்தை ஒருங்கிணைத்து, கழக உறுப்பினர்கள் ராணுவக் கட்டுப்பாடடோடு நடத்தி விஸ்வாசமிக்க தொண்டர்களை உருவாக்கினார்கள். அதோடு ஆட்சியின் மூலமாக பொதுமக்களின் நன்மதிப்பையும் பெற்று ஆட்சியை பெற்றிருக்கிறது என்பதன் வரலாறு.
அந்த வரலாற்றை மீண்டும் உருவாக்கிட வேண்டும் என்பதற்கு தான் நாம் தர்மயுத்தத்தை நடத்திக் கொண்டிருக்கிறோம். அதற்கு முழு வடிவம் கொடுப்பதற்காக நிர்வாகிகளிடம் பேசி இன்றைக்கு ஒரு முடிவை எடுத்திருக்கிறோம். அதில் சில முடிவுகளை வெளியே சொல்ல முடியும், சில முடிவுகளை சொல்ல முடியாது. அது எல்லாம் உங்களுக்கு தெரியும். அதையெல்லாம் எங்களைப் போல் நீங்களும் உள்வாங்கி கொள்ள வேண்டும். செப்டம்பர் 4ஆம் தேதி மதுரையில் மாபெரும் மாநாடு நடைபெறும். அந்த மாநாட்டில் நம்முடைய அனைத்து நிலைகளையும், எதிர்காலத்தில் நாம் என்ன முடிவு எடுக்கப் போகிறோம் என்பதையும் தெரிவிக்கப்படும். ” என்று கூறினார்