கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். இந்த திட்டத்தின் கீழ் 'தமிழகம் முழுவதும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முகாம்கள் அமைக்கப்பட்டு 46 வகையான அரசுத் திட்டங்களின் சேவைகள் மனுசெய்த 45 நாட்களுக்குள் மக்கள் வசிக்கும் பகுதிக்கே சென்று வழங்கும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது' என அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் காமராஜர் நினைவிடத்தில் புகழஞ்சலி செலுத்திய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது உங்களுடன் ஸ்டாலின் திட்டம் குறித்த கேள்விக்கு பதிலளித்து பேசிய சீமான், 'உங்களுடன் ஸ்டாலின் சரி.. இவ்வளவு நாட்கள் அவர் யாருடன் இருந்தார். மக்களுடன் இல்லையா. இந்த கேள்விக்கு யாரிடம் பதில் உள்ளது. இப்போது வீடு தேடி அரசு போகிறது. இவ்வளவு நாட்கள் யாரைத்தேடி அரசு போனது. 'ஓரணியில் திரள்வோம்' எதற்காக கூடி கொள்ளை அடிக்க, கூடி கொலை செய்ய அதற்குதானே. தேர்தலுக்கு ஆறு மாதம் இருக்கும்போது தான் ஓரணியில் திரள்வீர்கள். அதற்கு முன்னாடி என்ன செய்தீர்கள். திராவிட பேரொளி என அயோத்தியாசருக்கு மண்டபம் கட்டியுள்ளனர். திராவிட பேரொளி என்று சொல்லிக்கொண்டு போங்க. இவர் திராவிட பேரொளி என்றால் ராமசாமி ஐய்யா திராவிட இருட்டா? திராவிடப் பேரொளியை 'திராவிட பேரொளி' என எழுதியுள்ளனர். அதைப் படியுங்கள். 'ப்' என்ற ஒற்றெழுத்து ஏன் இல்லை. சென்னை கடற்கரைக்கு போனால் 'நம்ம' தமிழில் இருக்கும் 'சென்னை' ஆங்கிலத்தில் இருக்கும். இப்படித்தான் இவர்கள் மொழியை வளர்க்கிறார்கள். முழுதாக ஆட்சியில் இருந்துவிட்டு தேர்தல் வரும்போது ஒரு காதல் வரும் பாருங்க தோண்டப்பட்ட குழிகள் மூடப்படும், சாலைகள் போடப்படும், விளக்குகள் எல்லாம் மின்தடை இன்றி எரியும். இதுதான் மக்களே தேர்தல் அரசியல் கட்சி அரசியல். இதைத்தாண்டி எப்போது மக்கள் நலன் குறித்த ஆட்சி வருமோ அன்றுதான் காமராஜரின் ஆட்சி மலரும்'' என்றார்.