மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த தேமுதிக விஜய பிரபாகரன் செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய் மதுரை மாநாட்டில் விஜயகாந்த் குறித்து பேசியது குறித்த கேள்விக்கு பதிலளித்து பேசிய அவர், ''விஜய்க்கும் விஜயகாந்த்கும் இடையே ஒரு நட்பு இருந்தது. சினிமாவில் அதைச் சொல்லாத விஜய் அண்ணன் அரசியலில் சொல்லியிருக்கிறார். இருவருக்கும் இருந்த நட்பை வெளிப்படையாக மேடையில் சொல்லி இருக்கிறார் ''என்றார்.
அப்பொழுது செய்தியாளர்கள் 'விஜயகாந்த் உயிருடன் இருக்கும் பொழுது விஜய் அவரைப் பற்றி எதுவும் பேசவில்லை. அரசியல் கட்சி ஆரம்பித்த பிறகு விஜயகாந்த் பற்றி பேசுகிறார்' என சீமான் சொல்லிய கருத்து குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த விஜய பிரபாகரன், ''இது குறித்து தேமுதிக பொதுச் செயலாளர் தெளிவான விளக்கத்தைச் சொல்லி இருக்கிறார். சீமான் உண்மையை உரக்கச் சொல்லி இருக்கிறார் என பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்து இருந்தார். அதையே எடுத்துக் கொள்ளலாம்'' என்றார்.
அப்பொழுது மற்றொரு செய்தியாளர், 'விஜயகாந்தையும் சீமான் விமர்சித்து அந்த காலத்தில் பேசியிருக்கிறார்' என்ற கேள்விக்கு, ''சீமான் அண்ணன் அன்றைக்கு யார் டிரெண்டில் இருக்கிறார்களோ அவர்களை விமர்சித்து பேசி தான் கட்சியை வளர்த்திருக்கிறார். அன்று கட்சி ஆரம்பிக்கும் பொழுது விஜயகாந்த் ட்ரெண்டாக இருந்தார். விஜயகாந்தை பற்றி விஜய் ஏன் இப்பொழுது பேசுகிறார் என்ற விஷயத்தை மட்டும் தான் நாங்கள் உரக்கச் சொல்கிறோமே தவிர, சீமான் சொன்ன எல்லா விஷயத்தையும் நாங்கள் உண்மை என்று சொல்லவில்லை. அன்று விஜயகாந்த்தை திட்டியதால் தான் சீமான் பெரிய ஆளானார். சீமான் வாங்கிய ஓட்டு எல்லாம் விஜயகாந்தை திட்டியதால் வாங்கிய ஓட்டு. யார் டிரெண்டில் இருக்கிறார்களோ அவர்களைதான் திட்டுவார்கள். அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை நிரந்தர நண்பனும் இல்லை. இதுதான் நிதர்சன உண்மை'' என்றார்.