Advertisment

கள்ளக்குறிச்சி காவல்நிலையத்தில் இளைஞர் தாக்கப்பட்ட விவகாரம்; ஒரு காவலர் மட்டும் இடமாற்றம்!

102

கள்ளக்குறிச்சி மாவட்டம், ஏர்வாய்பட்டினம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயபால். அதே கிராமத்தைச் சேர்ந்த சக்திவேலின் மகன் விஜய். 2024 ஆம் ஆண்டு, துபாயில் அதிக சம்பளத்துடன் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, விஜய், ஜெயபாலை சுற்றுலா விசாவில் அனுப்பியதாகத் தெரிகிறது. ஆனால், வேலைக்குச் சென்ற ஒரு மாதத்தில் ஜெயபாலின் உடல்நிலை மோசமடைந்ததால், வென்டிலேட்டர் உதவியுடன் தமிழகம் திரும்பினார்.

Advertisment

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், மூன்று நாட்களுக்கு முன்பு உயிரிழந்தார்.இதுகுறித்து, ஜெயபாலின் மனைவி மலர், விஜய்யிடம் விளக்கம் கேட்டபோது, “நீ இப்படி வந்து கேட்டால், உன் கணவருக்கு நடந்ததுதான் உனக்கும் நடக்கும்; குடும்பத்துடன் கொன்றுவிடுவேன்,” என விஜய் மற்றும் அவரது சித்தப்பா இருவரும் மிரட்டியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, மலர் கச்சிராயபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால், புகார் அளித்து ஒரு மாதத்திற்கும் மேலாகியும் காவல்துறையினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், மலர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். நீதிமன்றம் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட போதிலும், காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யாமல் இருந்ததாக கூறப்படுகிறது.

Advertisment

இந்நிலையில், மலரின் அக்கா மகன் விக்கி, தனது சித்தப்பா ஜெயபாலின் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி, கச்சிராயபாளையம் காவல் நிலையத்திற்கு நேரில் சென்று வலியுறுத்தியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த காவலர்கள், இரவு நேரத்தில் விக்கியை காவல் நிலையத்திற்கு வெளியே தாக்கி, உள்ளே இழுத்துச் சென்று கும்பலாக அடித்ததாகக் கூறப்படுகிறது. விக்கி காவல் நிலையத்திற்கு முன்பு நின்று காவலர்களைத் திட்டியதாகவும், அதற்கு பதிலடியாக காவலர்கள் தாக்கியதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த மாதம் நடந்த இந்தத் தாக்குதல் சம்பவத்தின் வீடியோ  ஓரிரு தினங்களுக்கு முன்பு வெளியாகி, பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இந்த விவகாரத்தில் தற்போது காவலர் மணிகண்டன் மட்டும்  ஆயுதப்படைக்கு மாற்றி கள்ளக்குறிச்சி எஸ்பி நடவடிக்கை எடுத்துள்ளார். முன்னதாகவே இந்த விவகாரம் குறித்து எஸ்.பி.க்கு  தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும், ஆனால், அவர் நடவடிக்கை எடுக்காமல் இருந்து வந்திருக்கிறார் என்று குற்றம் சாட்டும் சமூக ஆர்வலர்கள், தற்போது விவகாரம் வீடியோ மூலம் வெளியே தெரிந்ததால் கண் துடைப்புக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டுகின்றனர்.  

police custody kallakurichi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe