Advertisment

“சார் உதவித்தொகை வந்திருக்கு ஓ.டி.பி சொல்லுங்க...." - வீடியோ காலில் வந்த வில்லங்கம்!

Untitled-1

கோவை, புளியகுளம் பகுதியைச் சேர்ந்தவர் சார்லஸ் பீட்டர். இவரது மகன் கோவையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படித்து வருகிறார். இந்த நிலையில், ஆகஸ்ட் 17 அன்று சார்லஸ் பீட்டரின் செல்போன் எண்ணுக்கு, தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை என்ற சுயவிவரத்தில் (Profile) இருந்து வீடியோ அழைப்பு வந்துள்ளது. அந்த அழைப்பை சார்லஸ் பீட்டர் ஏற்று பேசியுள்ளார்.

Advertisment

அதில், எதிர்முனையில் பேசிய நபர் தனது முகத்தைக் காட்டாமல், மத்திய அரசின் திட்டத்தின் கீழ் உங்களது மகனுக்கு 38,500 ரூபாய் பள்ளிக் கல்வி உதவித்தொகை வந்திருப்பதாகக் கூறியுள்ளார். மேலும், அதனை அனுப்புவதற்கு GPay QR  கோட்டை காண்பிக்குமாறும், அதன்பின்னர் வரும் OTP-யைத் தெரிவிக்குமாறும் கேட்டுள்ளார். இதை நம்பிய சார்லஸ் பீட்டர், சரி என்று ஒப்புக்கொண்டார்.

ஆனால், சார்லஸ் பீட்டருக்கு அதனை எவ்வாறு செய்வது என்று சரியாகத் தெரியாததால், அருகில் இருந்த அவரது மாமனாரிடம் கேட்டறிந்து QR கோடை(QR Code) காண்பித்துள்ளார். ஆனால், அவரது வங்கிக் கணக்கில் பணம் குறைவாக இருந்ததால், “இந்த வங்கிக் கணக்கிற்கு பணம் அனுப்ப முடியாது. குறைந்தபட்சம் 10,000 ரூபாய் இருப்பு உள்ள வங்கிக் கணக்கிற்கு மட்டுமே பணம் அனுப்ப முடியும்” என்று வீடியோ அழைப்பில் பேசிய நபர் கூறியுள்ளார்.

அதனைத் தொடர்ந்து, மாமனாரின் வங்கிக் கணக்கிற்கு பணத்தை அனுப்புமாறு கூறி, அவரது GPay QR  கோடை காண்பித்துள்ளனர். பிறகு, அவருக்கு இரண்டு முதல் மூன்று முறை OTP வந்துள்ளது. அதனையும் அந்த வீடியோ அழைப்பில் இருந்த நபரிடம் கூறியுள்ளனர். அப்போது, பணம் இவர்களுக்கு வருவதற்கு மாறாக, இவரது வங்கிக் கணக்கிலிருந்து சுமார் 53,000 ரூபாய் எடுக்கப்பட்டுள்ளது.

Advertisment

இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள், உடனடியாக வீடியோ அழைப்பில் இருந்த நபரிடம், “பணம் எங்களுக்கு வராமல், எங்களது வங்கிக் கணக்கிலிருந்து எடுக்கப்பட்டுவிட்டது” என்று தெரிவித்துள்ளனர். அப்போது, அந்த நபர் முறையான விளக்கம் அளிக்காமல், திடீரென வீடியோ அழைப்பைத் துண்டித்துவிட்டார்.

இதனால் சந்தேகமடைந்த சார்லஸ் பீட்டர் மற்றும் அவரது மாமனார், உடனடியாக அருகிலுள்ள ராமநாதபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். மேலும், கோவை மாநகர சைபர் கிரைம் காவல் நிலையத்திலும் புகார் பதிவு செய்தனர். புகாரை ஏற்றுக்கொண்ட காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

வீடியோ அழைப்பு மூலம் மத்திய அரசின் பள்ளிக் கல்வி உதவித்தொகை வழங்குவதாகக் கூறி, பணத்தை மோசடி செய்த இந்தச் சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Coimbatore education scam case
இதையும் படியுங்கள்
Subscribe