One union secretary for 25,000 voters; TVK decision Photograph: (TVK)
அண்மையில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் இரண்டாவது மாநில மாநாடு மதுரை பாரபத்தியில் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து நேற்று (30/08/2025) பனையூரில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் டெல்டா மற்றும் தெற்கு மண்டல மாவட்டச் செயலாளர்களுடன் அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த் ஆலோசனை மேற்கொண்டார். இதனால் விரைவில் விஜய்யின் சுற்றுப்பயணம் குறித்த தகவல்கள் வெளியாக வாய்ப்பிருக்கும் என தகவல்கள் வெளியாகி இருந்தது.
இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நேற்று பொதுச்செயலாளர் தலைமையில் நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பிரதானமாக விஜய்யின் சுற்றுப்பயணம், அதற்கான திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதோடு மட்டுமல்லாமல் பிற கட்சிகளைப் பொறுத்தவரை ஒரு தொகுதிக்கு மூன்றிலிருந்து நான்கு ஒன்றியச் செயலாளர்கள் இருப்பார்கள். அதைக் காட்டிலும் வலுவாக உட்கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கில் 25,000 வாக்காளர்களுக்கு ஒரு ஒன்றியச் செயலாளர் என்ற அளவில் பொறுப்புகளை அமைத்திட கட்சித் தலைமை முடிவெடுத்துள்ளது. செப்டம்பர் 17ஆம் தேதிக்கு பின் ,விஜய்யின் சுற்றுப்பயணம் இருக்கும் என கூறப்படும் நிலையில் அதற்கு முன்பாக 25 ஆயிரம் வாக்காளர்களுக்கு ஒரு ஒன்றியச் செயலாளர்களை நியமிக்க மாவட்டச் செயலாளர்களுக்கு தலைமை கட்சியின் தலைமை உத்தரவிட்டுள்ளது.