சேலம் மாவட்டம் சீலநாயக்கன்பட்டியில், த.வெ.க. நிர்வாகிகள் சந்திப்பு மற்றும் தேர்தல் பரப்புரை நிகழ்ச்சி இன்று (13.02.2026) நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைவர் விஜய் கலந்து கொண்டார். அச்சமயம் அங்கு கடுமையான வெயிலின் தாக்கமும் இருந்தது. இதன் காரணமாக இந்த கூட்டத்தில் இருந்தவர்கள் கூட்டத்தின் தொடக்கத்திலேயே மயக்கமடைந்தனர். இதனையடுத்து அவர்களை உடனடியாக மீட்டு அருகிலிருந்த மருத்துவ முகாமிற்கு அழைத்துச் சென்று அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
இத்தகைய சூழலில் தான் இந்த கூட்டத்திற்கு மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த சுராஜ் (வயது 35) என்பவரும் வருகை தந்துள்ளார். அப்போது அவருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்ததாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து அங்கிருந்தவர்கள் மூலம் அவர் மீட்க்கப்ப்ட்டு ஆம்புலன்ஸில் உடனடியாக தனியார் மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், சுராஜ் மருத்துவமனைக்கு வரும் வழியிலேயே உயிர் இழந்துவிட்டதாகத் தெரிவித்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனையடுத்து அவருக்கு ஏற்கனவே உடல் உபாதைகள் ஏதேனும் இருந்ததா?. அல்லது வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால், உடலில் நீரிழப்பு ஏற்பட்டு உடல் நலம் பாதிக்கப்பட்டு வெப்பம் தாங்க முடியாமல் உயிரிழந்தாரா? என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். விஜய்யின் பரப்புரை கூட்டத்தில் வலிப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்த நபர் உயிரிழந்த சம்பவம் சேலத்தில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக இந்த கூட்டத்திற்கு சுமார் 5000 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்ட நிலையில் முதியவர்கள், கர்ப்பிணிப் பெண்கள், குழந்தைகள் மற்றும் உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள் வர வேண்டாம் என அறிவுறுத்தி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/02/13/slm-tvk-meeting-2026-02-13-15-16-31.jpg)