நாடு முழுவதும் நாய்க்கடி சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் தெரு நாய்களால் மற்றும் வளர்ப்பு நாய்களால் பொதுமக்கள் கடிபடும் சம்பவங்களின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அதிலும் குறிப்பாக குழந்தைகள் மற்றும் சிறார்களை நாய்கள் கடிக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.
சேலத்தில் ரேபிஸ் தொற்றால் ஒருவர் உயிரிழந்தது பரபரப்பைக் கூட்டிய நிலையில் சென்னையிலும் ஒருவர் நாய் கடித்த சில மணிநேரத்திலேயே உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/08/19/a4927-2025-08-19-18-45-44.jpg)
சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் இலவம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் குப்புசாமி. தறித் தொழில் செய்து வந்த குப்புசாமி கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு நாய் ஒன்றை வளர்த்து வந்துள்ளார். அந்த நாய் அந்தப் பகுதியில் உள்ள நபர்களை கடிக்க முயன்றுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த குப்புசாமி தான் வளர்த்த நாயை தானே அடித்துக் கொல்ல முன்றுள்ளார். அப்பொழுது குப்புசாமியையும் அந்த நாய் கடித்தது.
கடிபட்ட குப்புசாமி இதற்காக எந்த ஒரு மருத்துவச் சிகிச்சையும் எடுத்துக் கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக அவர் தண்ணீர் கூட குடிக்க முடியாத நிலைக்குச் சென்று அவதிப்பட்டுள்ளார். உடனடியாக வீட்டில் இருந்தவர்கள் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் அவருக்கு 'ரேபிஸ்' நோய்த் தொற்று இருப்பது தெரிய வந்தது. உடனடியாக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த குப்புசாமி இன்று சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இதேபோல் சென்னை குமரன் நகரில் நாய் கடித்து ஒருவர் உயிரிழந்த சம்பவம் மேலும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. சென்னை ஜாபர்கான்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் கருணாகரன் (48). சமையல் வேலை செய்து குடும்பத்தோடு வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இன்று வழக்கம்போல் சமையல் வேலைக்கு சென்றுவிட்டு மதியம் மூன்று மணியளவில் வீட்டுக்கு வந்துள்ளார். அப்பொழுது வீட்டு வாசலில் அமர்ந்திருந்த கருணாகரனை அருகில் உள்ள பூங்கொடி என்பவர் வளர்த்து வந்த பிட்புல் எனும் வெளிநாட்டு ராக நாய் கடித்துள்ளது.
கருணாகரனின் ஆணுறுப்பு மற்றும் தொடைப்பகுதி, இடுப்புப் பகுதியில் பலமாக நாய் கடித்ததில் ரத்தப் போக்கு ஏற்பட்டு கருணாகரன் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. தடுக்க முயன்ற பூங்கொடியையும் அந்த நாய் கொடூரமாக கடித்துள்ளது. சுற்றி இருந்த மக்கள் செய்வதறியாமல் தவித்து நாயை அடித்து விரட்டி உள்ளனர். பூங்கொடி மீட்கப்பட்டு கேகே நகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தொடர்ச்சியாக சென்னையில் ஒருவர் நாய்க்கடியால் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக குமரன் நகர் போலீசார் சிகிச்சையில் உள்ள நாயின் உரிமையாளர் பூங்கொடியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.