ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அடுத்துள்ள சேரங்கோட்டை என்ற பகுதியைச் சேர்ந்த 12ஆம் வகுப்பு மாணவி ஒருவர் அப்பகுதியில் அமைந்துள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயின்று வந்துள்ளார். இத்தகைய சூழலில் தான் அதே பகுதியைச் சேர்ந்த முனியராஜ் என்ற இளைஞர் கடந்த 6 மாதங்களாக இந்த மாணவியை ஒருதலை பட்சமாகக் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. அதே சமயம் அந்த மாணவி, இளைஞரின் காதலை ஏற்க மறுத்ததுடன், தன்னை பின்தொடர்ந்து வர வேண்டாம் என்றும் கூறியுள்ளார். 

Advertisment

இந்நிலையில் இன்று (19.11.2025) வழக்கம் போல் பள்ளிக்குச் சென்று கொண்டிருந்த மாணவியை பின் தொடர்ந்து சென்ற முனியராஜ் தனது காதலை ஏற்க வற்புறுத்தியுள்ளார். இதனை அந்த மாணவி ஏற்க மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த முனியராஜ் மறைத்து வைத்திருந்த கத்தியால் மாணவியைச் சரமாரியாகக் குத்தி கொலை செய்துள்ளார். இதனையடுத்து அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் மாணவியை மீட்டு அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மாணவி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். 

Advertisment

இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட முனியராஜை ராமேஸ்வரம் நகர போலீசார் தீரமாகத் தேடி வந்த நிலையில் கைது செய்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை செய்து வருகின்றனர். முன்னதாக இந்த மாணவி 11ஆம் வகுப்பு படித்த போது பள்ளிக்குத் தனியாகச் செல்லும் சமயத்தில் முனியராஜ் மாணவியிடம் தனது  காதலை ஏற்றுக்கொள்ளுமாறு பலமுறை வற்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. ராமேஸ்வரத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், அதிர்வலையையும் ஏற்படுத்தியுள்ளது.