புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் குடுமியாண்மலை கிராமத்தைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன். பட்டதாரியான இவர் ஒரு மாற்றுத்திறனாளி ஆவார். இவர் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு சவரிமுத்து அருள்தாஸ் என்ற பெயரில் அறக்கட்டளை தொடங்கி ரூ.1 லட்சம் கொடுத்து அறக்கட்டளை உறுப்பினராகச் சேர்ந்தால் வெளிநாட்டில் இருந்து அறக்கட்டளைக்கு வரும் பணத்தில் இருந்து ஒரு லட்சத்திற்கு ஒரு கோடி ரூபாய் தருவதாகக் கூறியுள்ளார். அதன்படி புதுக்கோட்டை மாவட்டம் தொடங்கி திருச்சி, கரூர், பெரம்பலூர், ஈரோடு எனத் தமிழ்நாடு முழுவதும் தரகர்கள் மூலம் பல ஆயிரம் பேரை உறுப்பினராகச் சேர்த்துப் பல நூறு கோடிகள் வரை வசூல் செய்துள்ளார்.
இது போலத் தமிழ்நாடு முழுவதும் நடக்கும் மோசடிகளைக் கண்காணித்து நடவடிக்கை எடுக்கத் தமிழ்நாடு அரசு உத்தரவையடுத்து டிஜிபி உத்தரவின் பேரில் சிபிசிஐடி போலீசார் அதிரடி நடவடிக்கையில் இறங்கினர். இதில், ஒரு லட்சம் கொடுத்தால் ஒரு கோடி என்ற சவரிமுத்து அருள்தாஸ் அறக்கட்டளை மோசடி கும்பலிடம் கடந்த 2013ஆம் ஆண்டு ரூ.11 லட்சம் கொடுத்து ஏமாந்த ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த தொல்காப்பியன் என்பவர் கொடுத்த புகாரின் பேரில், குடுமியாண்மலை ரவிச்சந்திரன், மற்றும் திருச்சி மண்ணச்சநல்லூர் சுபாஷ் சுவாமிநாதன் (இறப்பு), ஈரோடு மாவட்டம் கோபி குழந்தை வாசுகி, ஈரோடு மாவட்டம் சலங்கைபாளையம் கருணாமூர்த்தி, சூளை சுதா ஆகிய 5 பேர் மீது புதுக்கோட்டை சி.பி.சி.ஐ.டி போலிசார் கடந்த 9ஆம் தேதி வழக்குப்பதிவு செய்தனர்.
இதனையடுத்து குடுமியாண்மலை ரவிச்சந்திரன் மற்றும் கருணாமூர்த்தி ஆகிய இருவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் இவர்களுக்கு ஜாமீன் கேட்ட மனு நேற்று (22.09.2025) தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில், தமிழ்நாடு முழுவதும் பெரிய அளவில் மோசடி நடந்துள்ளதாகப் பலரும் புகார்கள் கொடுத்து வரும் நிலையில் வழக்கு சம்பந்தமாக விசாரணை செய்ய 4 நாட்கள் கஸ்டடி வேண்டும் என்று புதுக்கோட்டை சிபிசிஐடி போலிஸ் இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி புதுக்கோட்டை குற்றவியல் நடுவர் நீதிமன்ற 2இல் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு குற்றவியல் நடுவர் நீதிமன்ற 2வது நீதிபதி அமர்வில் இன்று (23.09.2025) அமர்வில் விசாரணைக்கு வந்தது. இதில், ரவிச்சந்திரன் மற்றும் கருணாமூர்த்தி ஆகிய இருவருக்கும் 2 நாட்களுக்கு கஸ்டடி கொடுத்து நீதிபதி அமுதவாணன் உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவையடுத்து இருவரையும் சிபிசிஐடி போலிசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். நாளை மறுநாள் (25.09.2025 - வியாழக்கிழமை) மாலை மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர்.